"தடைகளை முறித்து வருவது தான் வெற்றி" .... "விஜயகாந்த் வழியில் வரும் விஜய்க்கு வாழ்த்துக்கள்" - பிரேமலதா விஜயகாந்த்!
புதுக்கோட்டையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "தேமுதிக தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் இதில் மறக்க முடியாத சம்பவம் கேப்டன். திமுக கொடுத்த வாக்குறுதிகள் இதுவரை நிறை வேற்றப்படவில்லை. சட்டம், ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது.
அந்த வகையில் 2026 தேர்தல் மிகப் பெரிய மாற்றம் ஏற்படக்கூடிய தேர்தலாக இருக்கும், புதிதாக விஜய், சீமான், பாமக போன்ற கட்சிகள் உள்ளது. தற்போது விஜய் சந்தித்து வரும் நெருக்கடிகளை போன்று, தேமுதிகவும் கடந்து வந்த கட்சி தான், 20 ஆண்டுகளுக்கு முன்பு கேப்டன் கட்சி ஆரம்பித்தபோது என்ன இருந்ததோ அதைத்தான் தற்போது பார்க்கிறேன்.
கடந்த 20 ஆண்டுகளில் தேமுதிக பல்வேறு இடையூறுகளை சந்தித்து, தற்போது 21 வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. விஜய் கூட்டத்திற்கு காவல்துறை வேண்டுமென்றே தடை போடுகிறது என்று சொல்ல முடியாது. சட்ட ஒழுங்கு பிரச்சனைக்காக கட்டுப்பாடுகள் கொண்டு வரலாம், நடிகர் விஜய் பிரச்சாரத்தில் என்ன பேசுகிறார் என்பதை பார்த்துவிட்டு அதற்கு பிறகு பதில் சொல்கிறேன்.
கேப்டனுக்கு எப்படி இடையூறு கொடுக்கப்பட்டது என்பது நன்றாக தெரியும் அதையெல்லாம் தாண்டி வருவது தான் அரசியல், கேப்டன் கட்சி ஆரம்பித்த போது எந்த தலைவர்களும் ஆதரவு தெரிவிக்கவில்லை. கட்சியை ஒற்றை மனிதராக சுயம்புவாக ஆரம்பித்து எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றார். குறுகிய காலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை பெற்ற முதல் தலைவர் கேப்டன்.
தமிழகத்தில் மிகப்பெரிய இரண்டு கட்சிகள் உள்ளது, தேசியக் கட்சிகளும் உள்ளது. இதனால் தடைகள் இருக்கும் தடைகளை முறித்து வருவது தான் வெற்றி. விஜய் கேப்டனை ஃபாலோ பண்ணி வருகிறார், அவருக்கு வாழ்த்துக்கள். விஜயின் ஆட்சியில் பங்கு என்பதை நாங்கள் வரவேற்கிறோம், அதிகாரம் ஒரே இடத்தில் இல்லாமல் அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்படும்போது கேள்விகள் கேட்க முடியும், மக்களுக்காக மிகவும் சிறப்பாக செயல்பட முடியும் என்பது என்னுடைய கருத்து. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, பிரிந்திருந்தால் பலன் கிடையாது.
தேமுதிகவுடன் கூட்டணி வைக்க அனைத்து கூட்டணியும் தயாராக உள்ளது. கூட்டணி குறித்து ஜனவரி 9ஆம் தேதி அறிவிக்கப்படும். எம்ஜிஆரும், கேப்டனும் சினிமாத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்ததால் அவர்கள் குறித்த விஜய் பேசி வருகிறார், கேப்டனை அண்ணன் என்று தான் சொல்கிறார். அதனால் தான் விஜய் எங்கள் தம்பி என்று சொன்னோம். கடந்த காலங்களில் கட்டடத்தை, இழந்தும் எம்எல்ஏக்களை இழந்தோம் என சொல்கிறீர்கள், இந்த அரசியலுக்கு வந்ததுனால் கேப்டனையே நாங்கள் இழந்திருக்கிறோம், இதைவிட பெரிய இழப்பு எங்களுக்கு கிடையாது" என்று தெரிவித்துள்ளார்.