பிரஜ் பூஷன் சிங் மகனின் கார் மோதி 2 பேர் பலி!
பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் மகனும், கைசர்கஞ்ச் மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளருமான கரண் பூஷண் சிங்கின் கார் மோதியதில் 2 பேர் பலியாகியுள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தின் கோண்டாவில், பாஜக வேட்பாளரான கரண் பூஷண் சிங்கின் கார் வேகமாக சென்ற போது சாலையை கடக்க முயன்ற பைக் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் 2 இளைஞர்கள் சம்பவ சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். சாலையைக் கடக்க முயன்ற மற்றொரு பெண் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
காரில் இருந்தவர்கள் அங்கிருந்து தப்பியோடியதாக கூறப்படுகிறது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “ஷாஜாத் கான்(வயது 24), ரெஹான் கான்(வயது 17) மருந்து வாங்க பைக்கில் சென்றுள்ளனர். சடாய் புர்வா பேருந்து நிறுத்தத்திற்கு முன், எதிர் திசையில் இருந்து வந்த கார், பைக்கை அதன் வலதுபுறத்தில் இருந்து அதிக வேகத்தில் மோதியது. இந்த விபத்தில் ரெஹான் மற்றும் ஷாஜாத் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். விபத்து ஏற்படுத்திய கார் பிரஜ் பூஷண் குடும்பத்தினரின் பெயரில் பதிவு செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த காரில் கரண் பூஷண் பயணித்தாரா என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.
 
  
  
  
  
  
 