ஆண் நண்பர்களுடன் பேசிய காதலியை கொன்ற காதலன்!
நாகப்பட்டினத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவருக்கும், கிறிஸ்துவ கண்டிகையைச் சேர்ந்த சௌந்தர்யா என்ற பெண்ணுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில், இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், சௌந்தர்யா தனது ஆண் நண்பர்களுடன் பேசுவதை தினேஷ் பலமுறை கண்டித்துள்ளார்.
சௌந்தர்யா தினேஷின் எச்சரிக்கைகளை பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஆண் நண்பர்களுடன் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தினேஷுக்கு கடும் கோபம் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சம்பவத்தன்று, இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த தினேஷ், தான் வைத்திருந்த கத்தியால் சௌந்தர்யாவை சரமாரியாகக் குத்திக் கொலை செய்துள்ளார்.
சௌந்தர்யாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள், தினேஷ் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார், சௌந்தர்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், தப்பியோடிய தினேஷைப் பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தக் கொலை சம்பவம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.