பும்ராவை பின்னுக்குத் தள்ளி அர்ஷ்தீப் சிங் புதிய சாதனை!
சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகள் கைப்பற்றி வேகப் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் சாதனை படைத்துள்ளார்.
இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் நிறைவடைந்த நிலையில், 4-வது மற்றும் கடைசி டி20 போட்டி ஜோகன்ஸ்பெர்க்கில் இன்று (நவ.15தேதி) நடைபெறுகிறது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது.
இப்போட்டியில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம், இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 2-வது வீரர் என்ற சாதனையை அர்ஷ்தீப் சிங் படைத்துள்ளார். இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்களான ஜஸ்பிரித் பும்ரா மற்றும் புவனேஷ்வர் குமாரை பின்னுக்குத் தள்ளி அர்ஷ்தீப் இரண்டாமிடம் பிடித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : கங்குவா படத்தின் முதல் நாள் வசூல் – அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!
டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்
யுஸ்வேந்திர சஹால் - 96 விக்கெட்டுகள்
அர்ஷ்தீப் சிங் - 92 விக்கெட்டுகள்
புவனேஷ்வர் குமார் - 90 விக்கெட்டுகள்
ஜஸ்பிரித் பும்ரா - 89 விக்கெட்டுகள்