புத்தக அறிமுகம் - "மால்கம் X : அறிமுகமும் அரசியலும்"
புத்தக கண்காட்சியில் இடம்பெற்றுள்ள மால்கம் எக்ஸ் : அறிமுகமும் அரசியலும் புத்தகம் குறித்து விரிவாக காணலாம்.
புகழ்பெற்ற சென்னை புத்தக கண்காட்சியின் 47வது புத்தக திருவிழா கடந்த 3ம் தேதி துவங்கியது. இந்த கண்காட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் அறிமுகமாகியுள்ளன. அவற்றில் மால்கம் எக்ஸ் அறிமுகமும் அரசியலும் பற்றிய புத்தகம் பற்றி விரிவாக காணலாம்.
தமிழ் எழுத்துலகில் மால்கம் எக்ஸ் பற்றி பல எழுத்தாளர்கள் புத்தகங்களை அறிமுகம் செய்துள்ளனர். ஆனால் இப்புத்தகம் அவரது அரசியல் குறித்த புதிய கோணங்களை முன்வைக்கிறது. இப்புத்தகத்தினை நியூஸ் 7 தமிழின் பொறுப்பாசிரியர் எஸ்.காஜா குதுப்தீன் எழுதியுள்ளார். மால்கம் எக்ஸை ஓர் கருப்பின போராளி என பலரும் முன்வைத்ததை தாண்டி அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்காக, ஒடுக்குமுறைக்கு எதிராக போராடியவர் என்கிற கோணத்தை இப்புத்தகத்தில் மிக ஆழமாகவும், சரியான உதாரணங்களோடும் எழுத்தாளர் குதுப்தீன் கடத்தியிருக்கிறார்.
வாசிப்பும் மால்கம் எக்ஸும்
மால்கம் எக்ஸையும் வாசிப்பையும் பிரிக்கவே முடியாது. 8ஆவது மட்டுமே படித்த ஓர் இளைஞன் சிறைக் கொட்டடியில் 1லட்சம் ஆங்கிலச் சொற்கள் நிறைந்த அகராதியை மனனம் செய்யும் அளவுக்கு வாசித்தார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..? சிறைகளில் உறங்குவதற்கு மால்கம் எக்ஸிற்கு வெறுமனே 4மணி நேரம் மட்டும் போதுமாயிருந்தது. மீதம் முழுக்க வாசிப்பு, வாசிப்பு, வாசிப்பு மட்டும்தான்.
சிறையிலிருந்து வெளியே வந்ததும் அவருக்கு புத்தகக் கடை வைத்திருக்கிற லூயிஸ் மைஷாவ் நண்பராக கிடைக்கிறார். பல நேரங்களில் மால்கமை அவர் கடையில் பூட்டி வைத்து சென்றிருக்கிறார். மால்கம் புத்தக் கடலில் பேரானந்தமாய் நீந்திக் கொள்வாராம். இந்த சுவாரஸ்ய தகவல்கள் வாசகர்களுக்கு கூடுதல் உற்சாகம் தரக்கூடியவை.
மால்கம் எக்ஸின் வாசிப்பு குறித்து அவரே இப்படி குறிப்பிடுகிறார்..
“சிறையில் பத்து காவலர்களும் ஒரு மேற்பார்வையாளரும் சேர்ந்து என்னையும் புத்தகத்தையும் பிரிக்க முனைந்திருந்தால் கூட அது முடியாமல்தான் போயிருக்கும். ஒரு பல்கலைக்கழக மாணவன் கூட இவ்வளவு புத்தகங்களைப் படித்திருக்க மாட்டான்.”
அமெரிக்காவைத் தாண்டி விடுதலை சிந்தனை :
ஒடுக்கப்பட்டவர்களுக்காக கவலைப்படுபவராக மால்கம் எப்போது இருந்திருக்கிறார் என்பதற்கான உதாரணங்களை ஆசிரியர் மிக நேர்த்தியாக விவரிக்கார். ஜப்பானின் மீதான அமெரிக்காவின் தாக்குதல் தொடங்கி , கியூபாவின் மீதான அமெரிக்க ஆதிக்கம், பிரிட்டிஷ் நாட்டில் மக்கள் ஒடுக்கப்படுவது குறித்த பஞ்சாப்காரரின் கடிதங்கள் வரை மால்கம் எக்ஸ் எடுத்த நிலைபாடும், போராட்ட வடிவமும் அவரை ஒடுக்கப்பட்டோரின் தலைவனாக முன்னிறுத்துகிறது.
அதனால் இப்புத்தகத்திற்கு அணிந்துரை எழுதியுள்ள பேராசிரியர் சுப.உதயகுமரன் "மால்கம் எக்ஸ் ஒரு மனித காந்தம்" என குறிப்பிட்டுள்ளார். ஒடுக்கப்பட்டோர் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அவர்களை நோக்கிய பரந்த சிந்தனை அவரிடம் காணப்பட்டது.
மால்கம் எக்ஸும் பிடல் காஸ்ட்ரோவும்
ஐநா மாநாட்டில் கியூப அதிபராக அமெரிக்கவிற்கு வந்த காஸ்ட்ரோ மால்கமின் அழைப்பைப் ஏற்று கருப்பின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ள தெரசா ஹோட்டலில் தங்கியது அமெரிக்காவின் முகத்தில் கரிபூசுவதைப் போல அமைந்தது. ஒடுக்கப்பட்டோருக்காக போராடிய இரு தலைவர்களின் சந்திப்புகள் பற்றிய வரிகள் சம கால போராட்ட அரசியலுக்கு படிப்பினை உண்டு. மதத்தின் பெயரிலும் , வர்கத்தின் பெயரிலும் , சாதியின் பெயரிலும் நடைபெறும் ஒடுக்குமுறைகள் எல்லாம் உலகம் முழுக்க ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன.
மால்கம் எக்ஸின் உரை வீச்சு
சமீபத்தில் காசா மீதான தாக்குதலைக் கண்டித்து கிருஸ்துமஸ் தின சிறப்புரையில் பேசிய பாதிரியார் முன்தர் ஐசக் "இப்போது இயேசு பிறந்திருந்தால் காசாவின் இடிபாடுகளுக்கு நடுவேதான் பிறந்திருப்பார்" எனப் பேசியிருந்தார்.
இதேபோன்றதொரு உரையை அரை நூற்றாண்டுக்கு முன்பு மால்கம் எக்ஸ் நிகழ்த்தியிருக்கிறார். இப்போது இயேசு இருந்திருந்தால் ஒடுக்குகிற வெள்ளையர்கள் பக்கம் இருந்திருக்கமாட்டார், ஒடுக்கப்படுகிற நீக்ரோக்கள், கருப்பின மக்களோடுதான் இருப்பார் என அவர் ஆற்றிய உரை வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒன்று. மால்கமின் உரை வீச்சுதான் அவரது தனித்துவமே. கணீர் கணீர் என அவர் பேசும் சொற்கள் இளைஞர்களுக்கு உற்சாகம் ஊட்டின, போராடுகிற உணர்வை தூண்டின.
உங்கள் உதடு அசிங்கமாக இருக்கிறது, உங்களது மூக்கு அருவருப்பாக இருக்கிறது, உங்களது நிறம் ரசிக்கும்படியாக இல்லை என வெள்ளையர்கள் உங்களையே நம்ப வைக்கிறார்கள். Who thought to Hate Yourself..? என அவர் எழுப்பிய கேள்விகள் கருப்பின மக்களை உலுக்கின.
புத்தகத்தின் இடையிடையே இடம்பெறும் மால்கம் எக்ஸின் உரைவீச்சுகள் வாசகர்களுக்கு அவரின் உணர்வுகளை அப்படியே கடத்தும் வல்லமை கொண்டவை.
மால்கம் எக்ஸ் பற்றிய அறிமுகத்தோடு அவரின் நுணுக்கமான அரசியலையும் சமகாலப் புரிதலோடு அணுகியிருக்கிறார் ஆசிரியர் காஜா குதுப்தீன். மால்கம் எக்ஸ் பற்றி முதல் முறையாக வாசிப்பவர்களுக்கு இந்த புத்தகம் எளிமையான அறிமுகத்தை தரக்கூடியது. இப்புத்தகத்தை எதிர் வெளியீட்டகம் வெளியிட்டுள்ளது.
- ச.அகமது , நியூஸ் 7 தமிழ்