"என் நரம்புகளில் ரத்தம் ஓடவில்லை.. சிந்தூர் தான் ஓடுகிறது" - பிரதமர் மோடி பேச்சு
பிரதமர் மோடி ராஜஸ்தானின் பிகானீர் மாவட்டத்தில் ரூ.26 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார். பின்னர் பிரதமர் மோடி அப்பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது,
‛‛பாரத மாதாவின் சேவகனான மோடி நெஞ்சை நிமிர்த்தி இங்கே நிற்கிறேன். மோடியின் எண்ணம் நிதானமாகத்தான் இருக்கும். ஆனால் மோடியின் ரத்தம் கொதிக்கிறது. மோடியின் நரம்புகளில் ரத்தம் ஓடவில்லை சிந்தூர் (குங்குமம்) தான் ஓடுகிறது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை நம் படை வீரர்கள் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். ஏப்ரல் 22 தாக்குதலுக்கு பதிலடியாக வெறும் 22 நிமிடங்களில் பாகிஸ்தானின் 9 முக்கிய இடங்களை அழித்தோம். ரஹீம் யார் கான் விமானப்படை தளம் ஐசியூவில் உள்ளது.
இந்தியர்களை ரத்தம் சிந்த வைத்தவர்களின் கணக்கு தீர்ந்துவிட்டது. இந்தியா மவுனமாக இருக்கும் என்று நினைத்தவர்கள் இன்று தங்களின் வீடுகளில் ஒளிந்து கொள்கிறார்கள். நம் நாட்டின் ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை உலகம் முழுவதும் பார்த்துள்ளது. சிந்து நதி நீர் இந்தியாவுக்குச் சொந்தமானது. எதிர்காலத்தில் ஏதேனும் தாக்குதல் நடந்தால், இந்தியா தனது பதிலடிக்கான நேரத்தையும் இடத்தையும் தேர்ந்தெடுக்கும்.
நம்முடைய அடுத்த தாக்குதல் அவர்களின் கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். இப்போது நாம் உள்கட்டமைப்புகளுக்காக 1.5 மடங்கு அதிகம் செலவிட்டு வருகிறோம். உலகின் அனைத்துத் திசைகளிலும் நாம் வளர்ச்சியடைந்து வரும் வேகத்தைக் கண்டு உலகமே வியப்படைகிறது''
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.