24 இடங்களில் வெடிகுண்டுகள்... #Assam தப்பியது எப்படி?
சுதந்திர தின கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் வகையில், அசாமில் 24 இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுதும் நேற்று சுதந்திர தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த சூழலில் அசாமில் நடந்த சுதந்திர தின கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் வகையில், உல்ஃபா அமைப்பு, பல்வேறு ஊடகங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியது. அதில், "அசாம் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் பிற்பகல் வரை குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததது. ஆனால், சில தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடிக்கவில்லை" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், அந்த மின்னஞ்சலில் 19 குண்டுகள் வைக்கப்பட்டிருந்த இடங்கள் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டதுடன், மீதமுள்ள 5 இடங்களை சுட்டிக்காட்ட முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்த இடங்களுக்கு பாதுகாப்பு படையினர், மோப்ப நாய்கள், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுடன் விரைந்து சென்றனர்.
தொடர்ந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த 24 வெடிகுண்டுகளில் குவாஹாட்டியில் இருந்த 8 குண்டுகள் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வ சர்மா மற்றும் அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ இல்லம் அமைந்துள்ள பகுதிகளில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.