இபிஎஸ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் - மோப்பநாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை!
அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வீடு சென்னை பசுமை வழி சாலை அருகில் உள்ளது. இந்த நிலையில் அவரது வீட்டுக்கு மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து மோப்பநாய் உதவியுடன் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் மாளிகை, முதலமைச்சர் இல்லம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், புதுச்சேரி தலைமை தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
தொடர்ந்து புதுச்சேரியில் இன்று(ஏப்ரல்.25) ஜிப்மர் மருத்துவமனைக்கு இ மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தொடர்ந்து அங்கு உள்ள மருத்துவ மாணவர்கள் மற்றும் நோயாளிகளின் உறவினர்களை வெளியேற்றி மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் 100-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.