சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... சென்னையில் பரபரப்பு!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக சந்தேகித்த இந்தியா, பாகிஸ்தான் உடனான உறவை இந்தியா முற்றிலுமாக துண்டித்தது. குறிப்பாக, வான்பரப்பு மூடல், சிந்துநதி ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.
இந்த சூழலில், நேற்று முன்தினம் நள்ளிரவு 1.44 மணியளவில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. மொத்தம் 9 இடங்களில் (சகாம்ரு, முரித்கி, கோட்லி, சியால்கோட், குல்பூர், பிம்பர், பஹவல்பூர்) பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்று பெயரிடப்பட்டது.
இதனையடுத்து இருநாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் இருநாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு குறுஞ்செய்தி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. Pakistanjkweb@gmail.com என்ற முகவரியிலிருந்து மிரட்டல் வந்ததாக தெரிகிறது. அதில், "we do bomb blast in stadium for operation sindoor... There will be blood bath" என குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
தகவலறிந்து சேப்பாக்கம் மைதானத்தில் விரைந்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியா - பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் எதிரொலியாக நடப்பு ஐபிஎல் தொடர் ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.