சூட் கேஸில் காங்கிரஸ் நிர்வாகியின் உடல் கண்டெடுப்பு - ஹரியானாவில் அதிர்ச்சி!
ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கில் நேற்று முன்தினம்(பிப்.28) சாம்ப்லா பேருந்து நிலையம் அருகே ஹிமானி நர்வா (23) என்பவரின் உடல் பெரிய நீல நிற சூட் கேஸில் இருந்து காவல்துறையினரால் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து சாம்ப்லா பகுதி காவல் அதிகாரி பிஜேந்திர சிங் , நெடுஞ்சாலையில் உள்ள புதர்களில் ஒரு சூட்கேஸுக்குள் ஒரு பெண்ணின் உடல் இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது என்றும் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவதாகவும் கூறினார்.
இதற்கிடையில் ரோஹ்தக் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ பாரத் பூஷன் பத்ரா, உயிரிழந்த பெண் காங்கிரஸ் கட்சியின் தொண்டர் என்றும் அவர் பாரத் ஜோடோ யாத்திரையின் போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் பங்கேற்றதாகவும் கூறினார். இதையடுத்து இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இச்சம்பவத்திற்கு அம்மாநில முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் மாநிலத் தலைவருமான பூபிந்தர் சிங் ஹூடா கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ரோஹ்தக்கில் காங்கிரஸ் கட்சியின் தீவிர தொண்டரான ஹிமானி நர்வால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட செய்தி மிகவும் வருத்தமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது. அவருக்கு என் அஞ்சலியையும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த இது மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு மீது படிந்துள்ள கறை" என்றார்
மேலும் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கொலை குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு விரைவில் நீதி வழங்க வேண்டும். குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனையை வழங்க வேண்டும்” என்று கூறினார்.