பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு - உயிரிழப்பு எண்ணிக்கை 8ஆக உயர்வு !
வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணம் அக்கோரா கட்டக் மாவட்டத்தில் தலிபான் சார்பு பாடசாலை பகுதியில் உள்ள ஒரு மசூதியில் நேற்று (பிப்.28) குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் மசூதியில் வழிபாடு நடத்திய 5 பேர் உயிரிழந்த நிலையில் 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததால், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 17 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தற்கொலைப்படை குண்டுவெடிப்பு முக்கியமாக ஜமாய்த் உலமா இஸ்லாம் பிரிவின் தலைமை இமாம் மற்றும் மதரஸா-இ-ஹக்கானியா மசூதியின் பொறுப்பாளருமான ஹமீதுல் ஹக் ஹக்கானியை கொலை செய்யும் நோக்கத்தில் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது முதற்கட்டமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரமலான் நோன்பு தொடங்கவிருக்கும் நேரத்தில் மசூதியில் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். ஆனால் இந்த தாக்குதலுக்கு இதுவரையில் எந்த பயங்கரவாத அமைப்பினரும் பொறுப்பேற்கவில்லை என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.