"அமித்ஷாவிற்கு எதிராக நாளை கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்" - செல்வப்பெருந்தகை அறிவிப்பு!
நாடாளுமன்றத்தில் கடந்த டிசம்பரில் நடைபெற்ற அரசியல் சாசனம் மீதான விவாதத்தின் போது பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, “’அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்" என கூறுவதற்கு பதிலாக கடவுளின் பெயரை உச்சரித்திருந்தாலாவது ஏழு ஜென்மத்திற்கும் சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும்” எனக் கூறினார். இதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதற்கிடையே, “மத்திய அமைச்சர் அமித்ஷா எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கு காங்கிரஸ் கமிட்டி சார்பாக கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்திருந்தார். அதன்படி, அமித்ஷாவின் வருகையின்போது போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று இரவு தமிழ்நாடு வருகை தருகிறார். இந்த நிலையில், அமித்ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் நாளை கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
"அண்ணல் அம்பேத்கரை இழிவாக பேசியும், தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டும் மத்திய அரசை கண்டிக்கும் விதமாகவும் இன்று 10.04.2025 இரவு தமிழ்நாடு வருகை தரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு எதிராக எனது தலைமையில் சென்னை மைலாப்பூரில் நாளை 11.04.2025 கருப்புக்கொடி ஏந்தி, கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நடத்தப்படும்"
இவ்வாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.