பாஜக பெண் நிர்வாகி தாக்கப்பட்ட விவகாரம் - அமர் பிரசாத் ரெட்டி மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
சென்னை கோட்டூர்புரத்தில் பாரதிய ஜனதா கட்சி பெண் நிர்வாகி ஆண்டாள்
தாக்கப்பட்ட விவகாரத்தில் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 4 பேர் மீது 9 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்தவர் தேவி. இவரது தங்கை ஆண்டாள். இவர் பாஜக மாவட்ட துணைத்தலைவராக பதவி வகித்து வருகிறார். கடந்த 19 ஆம் தேதி பிரதமர் மோடியின் வருகையையொட்டி, ஆட்களை அழைத்து வருவதில் ஆண்டாளுக்கும், பாஜக மகளிர் அணி மண்டல தலைவரான நிவேதாவுக்கும் இடையே பிரச்னை எழுந்துள்ளது.
இந்நிலையில், ஜன.21 ஆம் தேதி இரவு 8 மணி அளவில், அமர் பிரசாத் ரெட்டியின் கார் ஓட்டுநராக பணிபுரியும் ஶ்ரீதர், பாஜக நிர்வாகிகள் நிவேதா, கஸ்தூரி ஆகியோர் ஆண்டாள் வீட்டிற்கு நுழைந்துள்ளனர். மேலும், அமர் பிரசாத் ரெட்டிதான் உங்களை அடிக்க சொன்னார் எனவும், அமர் பிரசாத் ரெட்டியிடம் வாங்கிய பணத்தில் எங்களுக்கு பணம் வேண்டும் எனவும் கூறி, ஆண்டாள் மற்றும் அவரது சகோதரி தேவியை தாக்கியுள்ளனர்.
மேலும் ஸ்ரீதர் என்பவர் அவர் அணிந்திருந்த ஆடையை அவிழ்த்து காட்டி ஆபாசமாக பேசியுள்ளார். தொடர்ந்து, பணத்தில் பங்கு தரவில்லை என்றால் குடும்பத்துடன் கொன்றுவிடுவேன் எனவும் மிரட்டியுள்ளனர். இதனையடுத்து இதுதொடர்பாக தேவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
- 147 சட்ட விரோதமாக கூடுதல்
- 452 வீட்டில் அத்துமீறி நுழைந்து தாக்குதல்
- 323 காயம் ஏற்படுத்துதல்
- 324 ஆயுதங்களால் காயம் ஏற்படுத்துதல்
- 354 பெண்களின் மானத்துக்கு பங்கம் ஏற்படுத்து வகையில் நடந்து கொள்ளுதல்
- 427 பொருட்களை சேதப்படுத்துதல்
- 506(1) மிரட்டல்
- 109 குற்றச்செயலுக்கு உடந்தையாக இருத்தல்
- பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு 4
ஆகிய 9 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வழக்குப்பதிவை தொடர்ந்து, சைதாப்பேட்டை கிழக்கு மண்டல் பாஜக துணைத் தலைவர் ஸ்ரீதரை போலீசார் கைது செய்தனர். அமர் பிரசாத் ரெட்டி தலைமறைவாக இருப்பதாகவும், அவரை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.