பாஜக - தமாகா கூட்டணி? - இன்று மாலை ஜி.கே.வாசன், அரவிந்த் மேனன் சந்திப்பு!
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் பாஜக தேர்தல் மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் ஆகியோர் இன்று மாலை சந்திக்கவுள்ளதாகவும், கூட்டணி குறித்த அதிகாரபூர்வ சந்திப்பாக இது இருக்கக்கூடும் எனவும் கூறப்படுகிறது.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில் தொகுதி பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு ஆளும்கட்சியான திமுக, அதன் கூட்டணி கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை அண்மையில் நடத்தியது. தொடர்ந்து 2ம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று (பிப். 24) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. மேலும் இன்று (பிப். 25) மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
அதேபோல் எதிர்கட்சியான அதிமுகவில் இன்னும் கூட்டணி எதுவும் உறுதியாகவில்லை. தேர்தல் குறித்த அறிவிப்பு வந்த பிறகே கூட்டணி குறித்து அறிவிப்போம் என்று அதிமுக தொடர்ந்து கூறி வருகிறது. அதேநேரம் கூட்டணியை இறுதி செய்ய பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், பாஜக தேர்தல் மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் இன்று மாலை 7.30 மணிக்கு சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு, பாஜக உடனான கூட்டணி குறித்த அதிகாரபூர்வ சந்திப்பாக இது இருக்கக்கூடும் எனவும் கூறப்படுகிறது.
நாளை (பிப். 26) தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கூட்டணி மற்றும் தொகுதி குறித்த அறிவிப்பினை அக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜி.கே.வாசன் வெளியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.