அவதூறு பரப்பியதாக குற்றச்சாட்டு! திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நோட்டீஸ்!
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவதூறு பரப்பியதாக கூறி அவரிடம் ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளில் விஷ சாராயம் குடித்ததில் 6 பெண்கள் உட்பட 63 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர்.
இதனால் இறப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம், கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக எதிர் கட்சிகள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதையும் படியுங்கள் : “மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை எடுத்து நடத்துவது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் தங்களிடம் இல்லை” – TANTEA நிர்வாக இயக்குநர் விளக்கம்!
இதற்கிடையே, கள்ளக்குறிச்சியில் நடந்த விஷச்சாராய உயிரிழப்பில் அண்ணாமலையின் சதி இருக்குமோ என்று சந்தேப்படுவதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடந்த 23ம் தேதி புதுக்கோட்டையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில், தன்னைப் பற்றி தவறான தகவல்களை பரப்பியதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு ரூ. 1கோடி நஷ்ட ஈடு கேட்டு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், நோட்டீஸ் பெற்ற மூன்று நாட்களில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் எனவும் நஷ்ட ஈடாக பெறப்படும் பணத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் போதை மறுவாழ்வு மையம் அமைக்கப்படும் எனவும் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.