“பாஜக - ஆர்எஸ்எஸ் சிந்தனை அரசியலமைப்பிற்கு எதிரானது” - ராகுல் காந்தி!
பாஜக - ஆர்எஸ்எஸ் சிந்தனை அரசியலமைப்பிற்கு எதிரானது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற தள்ளு முள்ளு தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், மல்லிகார்ஜூனே கார்கேவும் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது ராகுல் காந்தி பேசியதாவது;
“அதானி மீதான அமெரிக்க வழக்கு பற்றிய விவாதத்தை நிறுத்த பாஜக முழு நேரமும் முயற்சித்தது. அந்த விவகாரத்தில் இருந்து திசைதிருப்பவே பல்வேறு வேலைகளில் பாஜக ஈடுபடுகிறது. பாஜக - ஆர்எஸ்எஸ் சிந்தனை அரசியலமைப்பிற்கு எதிரானது. அம்பேத்கருக்கு எதிரானது. அம்பேத்கரின் பங்களிப்பை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கட்சியினர் அழிக்க விரும்புகின்றனர். அம்பேத்கர் குறித்த கருத்துக்களுக்கு அமித ஷா மன்னிப்பு கேட்டு ராஜினாமா செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.
மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது;
“அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியதற்கு நான் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். அமித்ஷாவை நீக்க வேண்டும் என நாங்கள் கோரிக்கை விடுத்தோம். இது நடைபெறாது என்பது எங்களுக்கு தெரியும். அதனால் போராட்டத்தை கையில் எடுத்தோம். அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசிய விவகாரத்தை திசைதிருப்ப பாஜக விரும்புகிறது. அதனால் மற்ற விஷயங்கள் குறித்து குரல் எழுப்புகின்றனர். அம்பேத்கர்-நேருவை பாஜக எப்போதும் அவமதித்து வருகிறது இந்த இரண்டு பெரிய தலைவர்களுக்கு எதிராக பாஜக பொய்களை மட்டுமே கூறியுள்ளது.
நாங்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதை பாஜக எம்பிக்கள் தடுத்தனர். அவர்கள் என்னை தள்ளி விட்டனர். நான் நிலைதடுமாறி கீழே உட்கார்ந்தேன். நாங்கள் தினமும் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால் வன்முறை எதுவும் நடந்ததில்லை” என தெரிவித்தார்.