மீண்டும் பாஜக தலைவர் பதவி - தமிழிசை சௌந்தரராஜனின் விருப்பம் என்ன?
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னை மேற்கு மாம்பலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
“நாளை மறுநாள் பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகிறார். பாம்பன் பாலம் பல கோடி மதிப்பீட்டில் திறந்து வைக்கப்படுகிறது. இந்தியாவிலேயே முதல் முறையாக தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. தமிழகம் பயன்பெறும் அளவிற்கு பிரதமர் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
கச்சத்தீவு விவகாரத்தில் முதலமைச்சர் நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார். கச்சத்தீவு யாரால் தாரைவார்க்கப்பட்டது.? எதற்காக தாரைவார்த்தீர்கள்?. பின்பு ஏன் அதை தெரியாது என்று சொன்னீர்கள்?. நீட் தேர்விற்கு புதுச்சேரியில் எல்லாம் பயிற்சி தொடங்கி விட்டது. தமிழகத்தில் மாணவர்கள் நீட் வேண்டும் என்று தான் சொல்கிறார்கள்.
நீட் தேர்வை மத்திய அரசும், மாநில அரசும் யார் நினைத்தாலும் ரத்து செய்ய முடியாது. அதைத் தெரிந்தே முதல் கையெழுத்து நீட் என்று சொன்னார்கள்” என தெரிவித்தார். தொடர்ந்து மீண்டும் பாஜக மாநில தலைவராக நீங்கள் வர வாய்ப்பு உள்ளதா என்ற செய்தியாளரின் கேள்விக்கு, பாஜக மாநில தலைவர் பதவி குறித்து நான் பேச விரும்பவில்லை” என தெரிவித்தார்.