"தன்னைக் காண வேண்டுமெனில் ஆதார் கட்டாயம்'' - கங்கனா ரனாவத்தின் கருத்திற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்!
மக்கள் தன்னைக் காண விரும்பினால் ஆதார் அட்டையுடன் வருமாறு இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதி பாஜக எம்.பி கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், இமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக நடிகை கங்கனா ரனாவத் களமிறங்கினார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்ய சிங்கை 74,755 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். இதையடுத்து, மண்டி தொகுதி எம்பியாகவும் மக்களவையில் பதவியேற்றுக் கொண்டார். இந்த நிலையில், "தொகுதி மக்கள் தன்னைக் காண விரும்பினால், ஆதார் அட்டையுடன் வர வேண்டும்" என கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது :
"இமாச்சல பிரதேச மாநிலத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரக்கூடிய இடமாக திகழ்கிறது. எனவே, எனது தொகுதி மக்கள் சிரமத்தை சந்திக்கக்கூடாது என்பதற்காகவே ஆதார் அட்டையுடன் வரவேண்டும் என கூறுகிறேன். மேலும், என்னை சந்திப்பதற்கான காரணத்தையும், தொகுதிகளின் பிரச்னைகளையும் காகிதத்தில் எழுதி வரும்படி மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவதால் சாமானிய தொகுதி மக்கள் நிறைய சிரமங்களை எதிர்கொள்கின்றனர்”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், மண்டி தொகுதி எம்பி. கங்கனா ரனாவத்தின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.