முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானத்திற்கு எதிர்ப்பு: பாஜக வெளிநடப்பு!!
ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றுவது தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானம் மீது எதிர்கட்சியினர் கருத்துகளை முன்வைத்து வந்த நிலையில், பாஜக சட்டப்பேரவை குழு தலைவர் நயினார் நாகேந்திரன், பேசினார்.
அப்போது மத்திய அரசை ஆளுநரை குறைத்து பேசக் கூடாது என்று நீங்கள் தான் சொன்னீர்கள் ஆனால் அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டு உள்ளீர்கள் என்று அவை தலைவர் அப்பாவுவிடம் கேட்டார். அதற்கு மசோதா குறித்து தான் பேசப்பட்டது நாளை நீங்கள் கூட ஆளுநர் ஆகலாம் என்று சபாநாயகர் அப்பாவு நகைச்சுவையாக கூறினார்.
தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன், வேந்தரை ஆளுநரே நியமிக்க வேண்டும். ஆனால் இன்று முதலமைச்சர் நியமிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் என்று பேசினார்.
இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அப்போது வேந்தர், துணை வேந்தர் எல்லாம் அரசினுடைய பரிசலனைக்கு கொண்டு வந்து கலந்து பேசி அதற்கு பிறகு தான் நியமிப்பது வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போது அப்படி அல்ல அதனால் தான் எதிர்க்கிறோம் என்று கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, குஜராத்தில் முதலமைச்சர்தான் வேந்தராக இருக்கிறார். ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா மாநிலங்களில் முதலமைச்சர் பரிந்துரைப்பவர் தான் வேந்தராக உள்ளனர். தமிழகத்தில் மாநில கல்விக் கொள்கைக்காக குழு அமைத்து அதற்கான ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். உயர்கல்வி, பள்ளிக் கல்வியில் என அனைத்திலும் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தெலுங்கானா, கர்நாடக மாநிலங்களில் துணைவேந்தர் நியமனம் மாநில அரசிடம் தான் உள்ளது. ஆளுநர் மூலம் துணை வேந்தர் நியமிக்கப்பட்டால் அவர்கள் மக்கள் விரும்பும் படி இருப்பதில்லை என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.
இதனை தொடர்ந்து நயினார் நாகேந்திரன், ஆன்லைன் ரம்மி தடை செய்வது குறித்து பேசினார்.
இதற்கு பதில் அளித்த சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, ஆன்லைன் ரம்மியை பொறுத்தவரை அரசுக்கு அதிகாரம் இல்லை என்று ஆளுநர் தெரிவித்தார். ஆனால் நீதிமன்றத்தில் அதற்கு உரிய நியாயம் கிடைக்கும் இவ்வாறு கூறினார்.
இதனை தொடந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானங்களை ஏற்கவில்லை எனக் கூறி பாஜக சட்டப்பேரவை குழு தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட அக்கட்சியை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.