முஸ்லிம்கள் குறித்து தொடர் சர்ச்சை பேச்சில் ஈடுபடும் பாஜக தலைவர்கள்.. எழும் கண்டனங்கள்!
பாஜக அமைச்சர்கள் கிரிராஜ் சிங், ஹிமந்த பிஸ்வா சர்மா, சுவேந்து அதிகாரி போன்றோர் தொடர்ந்து முஸ்லிம்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது முறை பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. இந்த ஆட்சியில் மூன்றாவது முறை மத்திய அமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டவர்களில் மத்திய ஜவுளித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கும் ஒருவர். தேர்தல் முடிவுகள் வெளியானபோது செய்தியாளர்களை சந்தித்த இவர்,
“இஸ்லாமியர்கள் எனக்கு வாக்களிக்கவில்லை. எனக்கும் அவர்களுக்காகப் பணியாற்றுவதில் விருப்பமில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி அவர்கள் மீது ஒருபோதும் பாரபட்சம் காட்டவில்லை என்றாலும், எங்கள் வேட்பாளர்களைத் தோற்கடிக்க அவர்கள் வழிவகுத்துவிட்டனர்” என தெரிவித்திருந்தார். இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் தற்போதும் ஒரு மதவாத பேச்சின் மூலம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
கடந்த வாரம் முஸ்லிம் அமைப்பு சார்பில் பள்ளிக்கூடங்களில் சூரிய நமஸ்காரம் செய்யவோ, சரஸ்வதி பூஜை செய்யவோ, இந்துக் கடவுள்களின் பாடல்களை பாடவோ அரசு நிர்பந்திக்கக் கூடாது' என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கிரிராஜ் சிங், "1947-ல் மத அடிப்படையில் நமது நாடு பிரிக்கப்பட்டபோது, அனைத்து முஸ்லிம்களையும் நம் முன்னோர்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பியிருந்தால், தற்போது நாட்டின் நிலைமை வேறு விதமாக இருந்திருக்கும்.
மத அடிப்படையில் நாடு பிரிக்கப்பட்டிருந்தால், முஸ்லிம்கள் ஏன் இங்கு இருக்க அனுமதித்தார்கள்? அன்றே அவர்கள் அனுப்பப்பட்டிருந்தால் இன்று இப்படியொரு கேள்வியை கேட்டிருக்க மாட்டார்கள். முஸ்லிம்களை இங்கு வாழ அனுமதித்தது மிகப்பெரிய தவறு" என்று கூறியுள்ளார்.
மேலும் அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா கடந்த புதன்கிழமையன்று, “அஸ்ஸாமில் தற்போது முஸ்லிம்களின் மக்கள்தொகை 40 சதவிகிதமாக உள்ளது. கடந்த 1951ஆம் ஆண்டில் 12 சதவிகிதமாக இருந்தது. இது எனக்கு அரசியல் பிரச்னை இல்லை. வாழ்வா? சாவா? பிரச்னை" என கூறியிருந்தார். இவரின் இந்த வகுப்புவாத பேச்சுக்கும் பல கண்டனங்கள் எழுந்தன.
முன்னதாக மேற்கு வங்க பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி, "இந்த ஆண்டு மாநிலத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும், கடந்த வாரம் நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலிலும் பாஜகவின் மோசமான செயல்பாட்டிற்கு பெங்கால் இஸ்லாமியர்கள் தான் காரணம். நமக்கு யார் வாக்களித்தார்களோ அவர்களுக்காக நாம் நிற்பது தான் சரி" எனப் பேசி இருந்தது சர்ச்சையாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.