விலைவாசி உயர்வின் பிதாமகன் பாஜக - டி.கே.சிவகுமார் விமர்சனம்!
கர்நாடகாவில் விலைவாசி உயர்வை கண்டித்து அம்மாநில பிரதான எதிர்க்கட்சியான பாஜக போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. மாநிலத்தில் பால், டீசல், பெட்ரோல், குப்பை வரி போன்றவற்றின் சமீபத்திய விலை உயர்வுகள் தொடர்பாக கர்நாடக பாஜக, காங்கிரஸ் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறது.
இந்நிலையில் பாஜகவின் இந்த போராட்டத்தை அம்மாநிலத்தின் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர்,
“விலைவாசி உயர்வுக்கு காரணமே அவர்கள்தான். விலைவாசி உயர்வின் பிதாமகன் பாஜக. நாங்கள் பால் விலையைதான் உயர்த்தினோம். அது விவசாயிகளுக்கு பயனளிக்கும்” என்றார்.
மேலும் டெல்லி பயணம் குறித்து பேசிய அவர்,
“டெல்லியில், நீர்ப்பாசனம் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சரைச் சந்தித்தோம். கிருஷ்ணா நதி நீர் பிரச்னை தொடர்பாக மகாராஷ்டிரா, தெலங்கானா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் ஒரு கூட்டத்தை நடத்த அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். காவேரி நீர் பிரச்னையில் தமிழ்நாடு ஒத்துழைக்காது என்பது எங்களுக்குத் தெரியும். அதற்கு நீதிமன்றத்தை அணுகுவது மட்டுமே இப்போது இருக்கும் ஒரு தீர்வு” என தெரிவித்தார்.