"எங்கள் வங்கி கணக்குகளில் இருந்து பாஜக பணத்தை திருடுகிறது" - காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு
"எங்கள் வங்கி கணக்குகளில் இருந்து பாஜக பணத்தை திருடுகிறது" என காங்கிரஸ் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.
காங்கிரஸ் கட்சி தொடர்புடைய அனைத்து வங்கி கணக்குகளும் வருமான வரித்துறையினரால் முடக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது. இந்த குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் அஜய் மக்கான் தெரிவித்திருந்தது.
இதனை எதிர்த்து, காங்கிரஸ் கட்சி வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் முறையிட்டது. இதன் பின்னர் வங்கிக் கணக்கு முடக்கத்தை தற்காலிகமாக ரத்து செய்ய தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. இதனிடையே, காங்கிரஸின் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.65 கோடி வரி நிலுவைத் தொகையை வருமான வரித்துறை பிடித்தம் செய்துள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் ஜனநாயக விரோதமாக எங்கள் கணக்குகளிலிருந்து ரூ.65 கோடி வருமான வரித் துறை பிடித்தம் செய்துள்ளது கண்டிக்கத்தக்கது என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளார் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளது...
“ பாஜக எங்கள் பணத்தை வங்கிகளில் இருந்து திருடுகிறது. நாங்களும் இந்த நாட்டை ஆட்சி செய்தோம். இது போன்று அப்படி ஏதேனும் ஒரே ஒரு சம்பவம் காங்கிரஸ் தலைமையிலான UPA அரசாங்கத்திலோ அல்லது காங்கிரஸ் அரசாங்கத்திலோ பாஜகவினரால் சுட்டிக் காட்ட முடியுமா..? “ என கேள்வி எழுப்பியுள்ளார் .