"அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனை குறித்து முதலமைச்சர் கூறுவது உண்மை தான்" - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்
அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறைகளை வைத்து பாஜக திட்டமிட்டு சோதனை செய்து வருவதாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்
அருந்ததியர் சமுதாய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், வழக்கு விசாரணைக்காக ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சீமான் இன்று ஆஜரானார். இந்த வழக்கானது அடுத்த மாதம் 20ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டதை அடுத்து, சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
"பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை ஆகியவை வைத்து பாஜக திட்டமிட்டு சோதனை செய்து வருகிறது. தேர்தலுக்கு குறுகிய காலம் இருப்பதால் அச்சுறுத்தல் நடவடிக்கைகளை பாஜக மேற்கொண்டு வருகிறது.
அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறும் குற்றச்சாட்டுகள் உண்மை தான், அதில் தவறு இல்லை. பாஜக ரெய்டு குறித்து ஸ்டாலின் கூறுதை நான் வரவேற்கிறேன்.
உணவு, உடை, வழிபாடு என்பது அவரவர் உரிமை, விருப்பம். இந்திய நாட்டில் எந்த கறியை சாப்பிட வேண்டும் என்பதை முதலில் உறுதி செய்யட்டும். முடிவு செய்ய முடியவில்லை என்றால் பிறகு எதற்கு உணவு குறித்து பேசுகிறார்கள். மனித அகோரிகள் இறந்த உடல்களை சாப்பிட்டு கொண்டு இருக்கிறார்கள். அதற்கு என்ன செய்வது? இதை கேவலம் என்று பேசுவார்களா?
இதையும் படியுங்கள்: “தொழிற்துறையினருக்கு மின்கட்டண உயர்வை குறைக்க சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவோம்” – அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
நடிகர் விஜய் உறுதியாக அரசியலுக்கு வருவார். அவர் அரசியலுக்கு வந்த பிறகு அவருடன் கூட்டணி குறித்து பேசி முடிவு செய்யலாம். தற்போது நான் தனித்து தான் போட்டியிடுகிறேன்.
'நான் யாருக்கும் அடிமை இல்லை, எனக்கு யாரும் அடிமை இல்லை' என்ற சட்ட மேதை
அம்பேத்கரின் வாக்கியத்தை ஏற்று கொண்டாலே சனாதனம் என்ற ஒன்று இருக்காது. உலகத்தில் உழவர் குடி ஒன்று தான் நிரந்திரம்".
இவ்வாறு நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.