“குடியரசுத் தலைவர் பதவியை தவறான முறையில் பாஜக பயன்படுத்துகிறது” - பெ.சண்முகம் குற்றச்சாட்டு!
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ. சண்முகம் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்திருந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, “குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஒரு 14 கேள்விகள் அனுப்பி அதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்கிற முறையில கேட்ட செய்தி இப்போது நாடு முழுவதும் விவாதத்திற்கு உள்ளாகி இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் எட்டாம் தேதி தமிழ்நாடு அரசு கொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை
வழங்கியது.
அரசியல் சாசனம் தொடங்கி 75 ஆண்டுகள் ஆன நிலையில், ஆளுநர்களுக்கு இருக்கக்கூடிய அதிகாரம் என்ன குடியரசுத் தலைவருக்கு
இருக்கக்கூடிய அதிகாரங்கள் என்ன அவர்களுக்கு அனுப்பக்கூடிய மசோதாக்களுக்கு என்ன கால வரமுறை என்பதை பற்றி இவ்வளவு காலம் இது குறித்து ஒரு தெளிவு இல்லாமல் இருந்தது. இந்த முறை உச்ச நீதிமன்றம் அதனை தெளிவுபடுத்த கூடிய வகையில் மாநில சட்டமன்றங்களில் நிறைவேற்றக்கூடிய மசோதாலுக்கு மூன்று மாத காலத்திற்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் குடியரசுத் தலைவரும் மூன்று மாதத்திற்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் சட்டமன்றம் தான் உயர்ந்ததே தவிர மற்ற நிர்வாக பொறுப்பை ஏற்பவர்கள் உயர்ந்தவர்கள் அல்ல என்கிற திட்டவட்டமான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது. ஏற்கேனவே இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றபோது மத்திய அரசு சார்பில் பங்கேற்ற வழக்கறிஞர் என்னென்ன கேள்விகளை எழுப்பினார்களோ? அதே கேள்விகளை மத்திய அரசு குடியரசு தலைவர் மூலமாக கேள்விகளை எழுப்புகிறது. இதன்
மூலமாக ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இப்போது ஆளக்கூடிய மத்திய அரசாங்கம் ஏற்கவில்லை.
குடியரசுத் தலைவரின் பதவியை பாஜக அரசு தவறான முறையில் பயன்படுத்துகிறது, என்பதற்கு இந்த சம்பவம் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.
ஏனெனில் மாநில ஆளுநர்கள் தன்னிச்சையாகவும் தான்தோன்றித்தனமாகவும் தங்களது விருப்பத்திற்கு ஏற்பவும் தங்களது அரசியல் உள்நோக்கத்திற்கு ஏற்பவும்
செயல்பட்டு மக்களுடைய நலன்களை முடக்கக்கூடிய வகையில் இவ்வளவு காலம்
ஈடுபட்டார்கள். இதற்கு தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்காள ஆளுநர் உட்பட பலர் உதாரணமாக இருந்துள்ளனர்.
இதற்கெல்லாம் முடிவு கட்டும் வகையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு அமைந்தது. எனவே
நிச்சயமாக குடியரசுத் தலைவர் கேள்வியை எழுப்பியதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பதில் அளிப்பார்கள் இருந்தாலும் கூட மாநில அரசியல் சாசனம் தான் எல்லாவற்றையும் விட மேலானது என்கிற முறையில் அவரவர்களுக்கு தீர்மானிக்க முடிவெடுக்கக்கூடிய அதிகாரங்களுக்கு உட்பட்டு மாநிலங்களுக்கு இருக்கக்கூடிய அதிகாரங்களை பறிக்கக் கூடிய வகையில் மத்திய அரசு செயல்படக்கூடாது.
மாநிலங்களின் அதிகாரங்களை பறிக்கக் கூடிய வகையில் தான் கூட்டாட்சி கோட்பாடுகளுக்கு விரோதமாக பாஜக இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது என குற்றம் சாட்டுகிறேன். இந்த பிரச்சினைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒத்தக் கருத்துடைய மாநில முதலமைச்சர்கள் இணைத்து சட்டப் போராட்டத்தை நடத்துவோம் என தெரிவித்துள்ளார். இது ஒரு நல்ல அணுகுமுறை இது தொடர வேண்டும்”
இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.