"மத்திய புலனாய்வு அமைப்புகளை பாஜக தவறாக பயன்படுத்தி வருகிறது" - காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி
"மத்திய புலனாய்வு அமைப்புகளை பாஜக தவறாக பயன்படுத்தி வருகிறது" என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
நாட்டின் கிழக்கில் இருந்து மேற்கு வரை ராகுல் காந்தியின் இரண்டாம் கட்ட நடைப்பயணமான ‘இந்திய நீதி பயணம்’ கடந்த ஜன. 14-ம் தேதி மணிப்பூரில் தொடங்கியது. இந்த நடைப்பயணம் மொத்தம் 6,713 கி.மீ. தொலைவுக்கு மேற்கொள்ளப்பட உள்ளது. தொடர்ந்து 110 மாவட்டங்கள், 100 மக்களவைத் தொகுதிகள் வழியாக 67 நாள்கள் இப்பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நடைப் பயணம் மார்ச் 20-ம் தேதி மும்பையில் நிறைவடைய உள்ளது. இந்த நடைப்பயணம் நேற்று (பிப்.01) மேற்கு வங்கத்தை அடைந்தது. இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி "அமலாக்கத்துறை, சிபிஐ, ஐடி ஆகியவையெல்லாம் இனி மத்திய புலனாய்வு அமைப்புகள் கிடையாது' என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்: “சாதி, மதம் அற்றவர் சான்றிதழை வழங்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை” – உயர்நீதிமன்றம் உத்தரவு
அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது:
"ED, CBI, IT ஆகியவையெல்லாம் இனி மத்திய புலனாய்வு அமைப்புகள் கிடையாது. அவையனைத்தும் பாஜக-வின் எதிர்கட்சிகளை அழிக்க பயன்படும் அமைப்பாக மாறிவிட்டது. ஊழலில் திளைத்திருக்கும் பாஜக, தனது அதிகார மோகத்தால், இந்திய ஜனநாயகத்தை அழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது."
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.