ஜனநாயகத்தை அழித்து வருகிறது பாஜக..! - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
ED, CBI, IT போன்றவை அரசு நிறுவனங்களாக இல்லாமல், பாஜகவை எதிர்க்கும் குழுக்களை அழிக்கும் நிறுவனங்களாக மாறிவிட்டதாக காங். எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
நிலமோசடி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக ராஞ்சியில் உள்ள இல்லத்தில், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனிடம், அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து, அமலாக்கத்துறையினர் அவரை கைது செய்தனர். முன்னதாக, ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் தனது ராஜினாமா கடிதத்தை ஹேமந்த் சோரன் வழங்கினார்.
அவரது ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்ட நிலையில், ஜார்க்கண்ட் மாநில போக்குவரத்துத் துறை அமைச்சராக இருக்கும் சம்பாய் சோரன், அம்மாநிலத்தின் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். விரைவில் முதலமைச்சராக அவர் பதவியேற்கவுள்ளார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவரான ஹேமந்த் சோரன், இந்தியா கூட்டணியில் உள்ள நிலையில், அவரை கைது செய்ததற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை எழுப்பி வருகின்றன.
இதையும் படியுங்கள் : நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் - முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு..!
அந்த வகையில் காங். மூத்த தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்து தனது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை போன்றவை அரசு நிறுவனங்களாக இல்லை என்று தெரிவித்துள்ள ராகுல் காந்தி, இவை தற்போது பாஜகவை எதிர்க்கும் குழுக்களை அழிக்கும் நிறுவனங்களாக மாறிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் ஊழலில் திளைத்து வரும் பாஜக, அதிகார வெறிகொண்டு ஜனநாயகத்தை அழிக்கும் பிரச்சாரத்தை நடத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.