“ஒடிசாவில் ஆட்சி அமைக்கப்போவதாக பாஜக பகல் கனவு காண்கிறது” - நவீன் பட்நாயக் பதிலடி!
“ஒடிஸாவில் ஆட்சி அமைப்போம் என பாஜக பகல் கனவு காண்கிறது” என பிரதமர் மோடியின் பேச்சுக்கு முதலமைச்சர் நவீன் பட்நாயக் பதிலடி கொடுத்துள்ளார்.
இந்தியாவில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக கடந்த ஏப். 19 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் ஒரேகட்டமாக தேர்தல் முடிவடைந்தது. ஒடிஸாவில் மக்களவை தேர்தலும், சட்டப்பேரவை தேர்தலும் இரண்டு கட்டங்களாக மே.13 மற்றும் ஜுன்.1 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. ஜுன். 4 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அன்றைய தினமே ஒடிஸாவின் சட்டப்பேரவை தேர்தலுக்கான முடிவும் அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் ஒடிஸாவின் பெஹ்ராம்பூரில் இன்று காலை தேசிய கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பேசிய மோடி,
“ஜூன் 4 ஆம் தேதி பிஜு ஜனதா தள அரசு காலாவதியாகும் நாள். அன்று பாஜகவின் முதலமைச்சர் யார் என்பது அறிவிக்கப்படும். புவனேஷ்வரில் ஜூன் 10-ஆம் தேதி அவர் முதலமைச்சராக பதவியேற்கும் நிகழ்வுக்கு தற்போதே உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு ஒடிஸா முதலமைச்சர் நவீன் பட்நாயக் பதிலடி கொடுத்துள்ளார். “ஒடிஸாவில் ஆட்சி அமைப்போம் என பாஜக பகல் கனவு காண்கிறது” என பேசி நவீன் பட்நாயக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.