ஹரியானாவில் 3-ஆவது முறையாக ஆட்சி கட்டிலில் பாஜக! 48 இடங்களை கைப்பற்றி அசத்தல்!
ஹரியானாவில் 48 இடங்களை கைப்பற்றி மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது பாஜக.
ஹரியானா மாநிலத்தில் 90 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் காங்கிரஸ் கட்சி முன்னணி பெற்று வந்த நிலையில் தற்போது பா.ஜ.க. அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றது. இந்நிலையில், பா.ஜ.க. அங்கு 20 இடங்களில் வெற்றி பெற்றும், 29 இடங்களில் முன்னிலை பெற்றும் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. முதலமைச்சர் நயாப் சிங் சைனி 16 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து 3வது முறையாக பா.ஜ.க. ஆட்சி அமைக்க உள்ளதால், தொண்டர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஹரியானா சட்டமன்றத்துக்கு கடந்த 5-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 90 உறுப்பினர்கள் கொண்ட ஹரியானாவில், 67.90% வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (08.10.2024) காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த மாநிலத்தில் பாஜக – காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவியது. இந்த 2 கட்சிகள் தவிர இந்திய தேசிய லோக் தளம் – பகுஜன் சமாஜ் கூட்டணியும், ஜனநாயக ஜனதா கட்சி – ஆசாத் சமாஜ் கட்சி கூட்டணியும் களத்தில் இருந்தன. காங்கிரஸுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், ஆம் ஆத்மி கட்சி தனித்து களமிறங்கியது.
90 தொகுதிகளை கொண்ட ஹரியானாவில் ஆட்சியை பிடிக்க 46 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. ஆனால், ஹரியானாவில் பாரதிய ஜனதா கட்சி 48 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இதன்வாயிலாக 3-ஆவது முறையாக பாஜக ஆட்சி அமைக்கவுள்ளது. ஹரியானாவை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி 37 இடங்களில் வென்றது. இந்திய தேசிய லோக் தளம் 2 இடங்களிலும் சுயேட்சைகள் 3 இடங்களிலும் வென்றுள்ளன.