"மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது" - கனிமொழி எம்.பி. பேச்சு!
மத்திய அரசானது தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து துரோகத்தை செய்து வருவதாக திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
2024 மக்களவை தேர்தலையொட்டி, தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு பிப்ரவரி 5-ம் தேதி முதல், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு சென்று மக்களை நேரில் சந்தித்து பரிந்துரைகளை பெறும் பணியை தொடங்கி உள்ளது. உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் – நாடாளுமன்றத்தில் ஒலித்திட வேண்டிய தமிழ்நாட்டின் கருத்துகள் என்ற தலைப்பில், பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டு வருகிறது.
இதையும் படியுங்கள் : தமிழ்நாட்டில் அனைத்து நகரங்களும் சீராக வளர்ந்து வருகிறது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
இந்நிலையில், இன்று சேலம் மாவட்டத்தில் கருத்து கேட்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கருத்துக் கேட்கும் கூட்டத்தில் கனிமொழி எம்.பி. மக்களை நேரில் சந்தித்து பரிந்துரைகளை கேட்டறிந்தார்.
இது குறித்து கனிமொழி எம்.பி. கூறியதாவது :
"சேலம் மாவட்டத்தின் அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சருக்கு தெரிவித்து, தேர்தல் அறிக்கையில் இடம் பெற செய்வோம். மத்திய அரசானது தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து துரோகத்தை செய்து வருகிறது. வெள்ள நிவாரண நிதியாக தமிழ்நாடு அரசு கேட்ட நிதியை வழங்காமல் மறுப்பு தெரிவித்து வருகிறது. மத்திய அரசு மக்களுக்கான அரசாக இல்லாத நிலையில் உள்ளது.
மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் பெரும் சிரமத்தை கொடுக்கும் ஜிஎஸ்டி யில் உள்ள குழப்பத்தை நீக்கிட வேண்டுமென பலமுறை கேட்டும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை. இப்படி மக்களின் மனநிலையை புரிந்து கொள்ளாத, மக்களை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்லாத அரசாக பாஜக அரசு உள்ளது.
மக்களை ஒற்றுமையுடன் வைத்துக் கொள்ளும் இந்திய அரசை உருவாக்க வேண்டும். எனவே, வரும் தேர்தலில் ஒற்றுமையை நிலை நாட்டும் அரசை, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அரசு, வேலை வாய்ப்புகளை உருவாக்கி தரும் அரசை தேர்ந்து எடுக்கும், இந்த தேர்தலை நாம் சந்திக்க உள்ளோம். இதற்கு அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்" இவ்வாறு கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.