பாலியல் புகாரில் சிக்கிய பாஜக நிர்வாகி அமித் மாளவியா!
பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு (IT Wing) தலைவர் அமித் மாளவியா மீது ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளதால் உடனடி நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு (IT Wing) தலைவர் அமித் மாளவியா, மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்க மாநில பாஜக தேர்தல் பணி மேற்பார்வையாளராகச் செயல்பட்டு வந்த போது பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி சாந்தனு சின்ஹா பரபரப்பு புகார் கூறியுள்ளனர். பிரதமர் மோடி 3-வது முறையாக பதவியேற்ற 24 மணி நேரத்தில் பாஜக வின் முக்கிய நிர்வாகி மீது பாலியல் புகார் எழுந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை, சாந்தனு சின்ஹா தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அமித் மாளவியா மீது ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளதால் உடனடி நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
இதையும் படியுங்கள் : மீண்டும் மத்திய அமைச்சராக்கிய பிரதமர் மோடிக்கு நன்றி! – பொறுப்பேற்ற பின் எல்.முருகன் பேட்டி!
அப்போது பேசிய அவர் கூறியதாவது :
"அமித் மாளவியா மீது ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த சாந்தனு சின்ஹா என்பவர் பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளார் . 5 நட்சத்திர ஓட்டல் மட்டுமல்ல மேற்கு வங்கத்தில் பாஜக அலுவலகத்திலேயே பெண்களிடம் அமித் மாளவியா அத்துமீறியுள்ளார்.
பாலியல் புகாருக்குள்ளான அமித் மாளவியாவை பாஜக. ஐ.டி. பிரிவு தேசிய தலைவர் பதவியில் இருந்து உடனே நீக்க வேண்டும். அமித் மாளவியாவை பதவியில் இருந்து நீக்கிவிட்டு அவர் மீதான பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்த வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க ஒன்றிய பா.ஜ.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.