பாஜக தேர்தல் அறிக்கை குழு - நாளை முதல் கருத்துகேட்பு!
2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழக பாஜகவின் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை குழு நாளை முதல் மக்களை சந்தித்து கருத்து கேட்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
கடந்த 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை முடிவுக்கு வருகிறது. இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இரு அவைகளிலும் அனல் பறக்கும் விவாதம் நடைபெற்று வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜக தேர்தல் மேலாண்மை குழு அமைக்கப்பட்டது. ஏற்கனவே பாஜக தனது சமூக வலைதள பக்கத்தில் "கேள்வி100" எனும் தலைப்பில் திமுக அரசு நிறைவேற்றாத தேர்தல் அறிவிப்புகளை கேள்விகளாக பதிவிட்டு வருகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழக பாஜகவின் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை குழு நாளை (பிப்.10) முதல் மக்களை சந்தித்து கருத்து கேட்பு நடத்த திட்டமிட்டுள்ளது.
தென்மாவட்டங்களுக்கான தொழில், வணிகம் மற்றும் சேவை துறை சம்பந்தமான கருத்து கேட்க முதல் கட்டமாக விருதுநகர் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் அறிக்கை குழு பாஜக-வின் 'என் மண் என் மக்கள்' பாத யாத்திரையை மையமாக கொண்டு நேரடியாக மக்களை சந்திக்க உள்ளது.