ராமர் கோயில் கட்டப்பட்ட ஃபைசாபாத் தொகுதியில் பாஜக தோல்விக்கு காரணம் என்ன?
அயோத்தி ராமர் கோயிலை முன்னிலைப்படுத்தி நாடு முழுவதும் பாஜக பிரசாரம் மேற்கொண்ட நிலையில், அக்கோயில் அடங்கிய ஃபைசாபாத் தொகுதியிலேயே தோல்வியை சந்தித்தது.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் INDIA கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்றது . INDIA கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
பாஜக தலைமையிலான கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றி இருந்தாலும், உத்தரப் பிரதேச மாநிலம் ராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியை உள்ளடக்கிய ஃபைசாபாத் தொகுதியில் பாஜக தோல்வி அடைந்தது. அயோத்தி கோயிலை முன்னிலைப் படுத்தி நாடு முழுவதும் பாஜக பிரசாரம் மேற்கொண்ட நிலையில், அக்கோயில் அடங்கிய ஃபைசாபாத் தொகுதியிலேயே தோல்வியை சந்தித்துள்ளது.
பாஜக வேட்பாளர் லல்லு சிங்கை விட 54,567 வாக்குகள் அதிகம் பெற்று சமாஜ்வாதி வேட்பாளர் அவதேஷ் பிரசாத் வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் லல்லு சிங் 4,99,722 வாக்குகளையும், சமாஜ்வாதி வேட்பாளர் அவதேஷ் பிரசாத் 5,54,289 வாக்குகளையும் பெற்றனர்.
- அயோத்தியை அழகுபடுத்தி, சாலைகளை விரிவுபடுத்துவதற்காக ஏராளமான வீடுகள் மற்றும் கடைகள் இடிக்கப்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் மத்தியில் ஏற்பட்ட கடும் அதிருப்தியும் பாஜகவின் தோல்விக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.
- பாஜக வேட்பாளர் லல்லு சிங் வியாபாரிகளின் கவலையை கண்டுகொள்ளவில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது.
- சமாஜ்வாதி கட்சி அயோத்தி மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக இது தொடர்பாக தீவிர பிரசாரம் மேற்கொண்டது.
- அனுமன்கா்ஹி கோயிலின் மகந்த் ராஜுதாஸ், "பாஜக மீது எங்களுக்கு எந்த அதிருப்தியும் இல்லை. ஆனால், அக்கட்சியின் வேட்பாளா் லல்லு சிங் ஆணவத்துடன் செயல்பட்டார்" என்று குற்றஞ்சாட்டினாா்.
ராமா் கோயில் தலைமை பூசாரி சத்யேந்திர தாஸ் கூறுகையில் "அயோத்தி தோ்தல் முடிவு அதிா்ச்சியளிக்கிறது. ராமரின் அருளால் நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராகவுள்ளாா்" என்றாா். அயோத்தி நகர பாஜக மேயா் கிரிஷ்பாட்டீ திரிபாதி பேசுகையில், "மக்களவைத் தோ்தல் முடிவு எங்களுக்கு அதிா்ச்சியளிக்கிறது என்பதில் எந்த சந்தேகமுமில்லை. அயோத்தியை பொருத்தவரை எதிா்க்கட்சிகள் சாதிரீதியிலான வியூகத்தை கையாண்டுள்ளன. நாங்கள் அதை குறைத்து மதிப்பிட்டுவிட்டோம்" என்றாா்.
இதுகுறித்து பாபா் மசூதி வழக்கில் மனுதாரா்களில் ஒருவரான இக்பால் அன்சாரி கூறுகையில், "அயோத்தியில் ஏராளமான துறவிகளும், மகான்களும் உள்ளனா். இந்த முடிவை கடவுளின் விருப்பமாக கருதிக் கொள்ளலாம். அயோத்தியில் முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைவு தான். வெற்றியோ, தோல்வியோ எதுவானாலும் அது இந்துக்களின் வாக்குகளால் தான்" என்றாா். அயோத்தி வாக்காளா்களக்காக எதுவும் செய்யாத எம்.பி-யை மீண்டும் களமிறக்கியதே பாஜகவின் தோல்விக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.