“ராதிகா சரத்குமார் கோடி கணக்கில் வரி செலுத்தாமல் சுதந்திரமாக உள்ளார்!” - காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாக்கூர்!
விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் கோடி கணக்கில் வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்திருக்கும் நிலையில், சிறு குறு தொழில் முனைவோர் ஜிஎஸ்டி அதிகாரிகளின் அச்சுறுத்தலுக்கு ஆளாவதாக காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாக்கூர் குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. வரும் 19-ஆம் தேதி (19.04.2024) தொடங்கி 7 கட்டங்களாக நாடு முழுவதும் தேர்தல் நடைபெறும் நிலையில், ஜூன் 1-ஆம் தேதி இறுதிகட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதற்கட்டமாக 19-ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகள் உள்பட நாடு முழுவதும் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குகள் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களின் விமர்சன பரப்புரை உச்சத்தை எட்டி வருகிறது. இதன் தொடர்ச்சியாக விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், பாஜக வேட்பாளர் நடிகர் ராதிகா சரத்குமார் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை ஆதாரப்பூர்வமாக முன்வைத்துள்ளார்.
ராதிகா சரத்குமார் தாக்கல் செய்த வேட்புமனு பிரமாண பத்திரத்தில் சுமார் 6 கோடியே 54 லட்சம் ரூபாய்க்கு மேலும், அவரது கணவர் சரத்குமார் 8 கோடியே 48 லட்சம் ரூபாய்க்கு மேலும் வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்திருப்பதை சுட்டிக்காட்டி தனது X (ட்விட்டர்) தள பக்கத்தில் விமர்சித்துள்ளார்.
விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் ட்விட்டர் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது:
“மோடியில் ஜிஎஸ்டி : பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் போன்றோர் வரி நிலுவை தொகையை செலுத்தாமல் சுதந்திரமாக உள்ளனர். அதே நேரத்தில் பல சிறு குறு தொழில் முனைவோர் ஜிஎஸ்டி அதிகாரிகளின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி போராட்டங்களுக்கு மத்தியில் தொழில் செய்து வருகின்றனர். வரி நடைமுறைகளை அனைவருக்கும் ஒரே மாதிரியாக சமத்துவமாக அமல்படுத்தும் நேரம் வந்துவிட்டது. INDIA கூட்டணி ஆட்சி அதை மாற்றும்.” இவ்வாறு மாணிக்கம் தாக்கூர் பதிவிட்டிருப்பதோடு ராதிகா சரத்குமாரின் வேட்புமனு பிரமாண பத்திரத்தின் புகைப்படத்தையும் தனது X தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.