சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் மனோஜ் சோங்கர் வெற்றி - யார் இவர்?
சண்டிகர் மேயர் பதவிக்கான தேர்தலில் பாஜகவின் மனோஜ் சோங்கர், ஆம் ஆத்மி குல்தீப் குமாரைத் தோற்கடித்து மேயர் பதவியை கைப்பற்றினார்.
பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களின் தலைநகரும், யூனியன் பிரதேசமுமான சண்டிகரின் மேயர், மூத்த துணை மேயர், துணை மேயர் பதவிகளுக்கான வாக்குப்பதிவு இந்த ஆண்டு மே 18-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இதில் இந்தியா கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து பாஜகவை எதிர்த்துக் களமிறங்கின. ஆம் ஆத்மி மேயர் பதவிக்கும், காங்கிரஸ் மற்ற இரண்டு பதவிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்தியது.
இதனிடையே தேர்தல் நடத்தும் அதிகாரி அனில் மசிஹின் நோய்வாய்ப் பட்டுள்ளதால், தேர்தல் நடைபெறாது என அறிவிக்கப்பட்டது. அத்துடன் பிப்.6-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தியதால் தேர்தல் தேதியை ஜனவரி 18-ம் தேதியில் இருந்து பிப்ரவரி 6-ம் தேதிக்கு சண்டிகர் துணை ஆணையர் ஒத்திவைத்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது கடந்த ஜன. 24-ம் தேதி விசாரணை நடைபெற்றது. அப்போது, ஜனவரி 30-ம் தேதி சண்டிகர் மேயர் தேர்தல் நடத்தப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து மேயர், துணை மேயர் ஆகிய பதவிகளுக்கான வாக்குப்பதிவு இன்று (ஜன. 30) காலை 10 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று நடைபெற்ற தேர்தலில் இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இணைந்து தேர்தலை எதிர்கொண்டன. 35 உறுப்பினர்களைக் கொண்ட சண்டிகரில், பாஜக 16 வாக்குகளையும், இந்தியா கூட்டணி 12 வாக்குகளையும் பெற்றன. 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இறுதியில் ஆம் ஆத்மி கட்சியின் குல்தீப் குமாரை தோற்கடித்து பாஜகவின் மனோஜ் சோங்கர் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
யார் இந்த மனோஜ் சோன்கர்?
சண்டிகரில் பாஜக கவுன்சிலராக இருப்பவர் மனோஜ் சோன்கர். பாஜகவில் பட்டியல் சாதியைச் சேர்ந்த மேயர் வேட்பாளர் இவர் மட்டுமே. 39 வயதான இவர் 7ம் வகுப்பு வரை படித்துள்ளார். மேலும் இவர் மதுபான வியாபாரம் செய்து வருவதாக கூறப்படுகிறது.