“அத்திக்கடவு - அவிநாசி திட்டம் விரைவில் துவக்கப்படும் என முன்பே அறிந்து பாஜக போராட்டம் அறிவிப்பு” - கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை விரைவில் துவக்கவுள்ளது என முன்பே தெரிந்து கொண்டு பாஜக போராட்டம் அறிவித்துள்ளது என கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அத்திக்கடவு - அவிநாசி திட்ட துவக்க விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியதாவது,
“இந்த அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை எடுத்துக்கொண்டால் , ஒரு மாதத்திற்கு முன்பாகவே நான் அமைச்சரிடத்தில் பேசியிருக்கிறேன். 3 வாரத்திற்கு முன்பாக தலைமை செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்து பேசியிருக்கிறேன். அன்று பேசும் போது முதலமைச்சர், சுதந்திர தினம் முடிந்ததும் அத்திக்கடவு - அவிநாசி திட்டம் துவக்கப்படும் என கூறியிருந்தார். அமைச்சரும் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக கூறியிருந்தார்.
ஆனால் இதற்கிடையில் பாஜகவினர் அரசியல் செய்ய பார்க்கின்றனர். அத்திக்கடவு - அவிநாசி திட்டம் துவங்க போகிறது என்பதை நான் நன்கு அறிவேன். ஆனாலும் சில கட்சிகள் தங்களுக்கு விளம்பரம் தேடிக்கொள்ள இப்படிப்பட்ட விஷயங்களை கையில் எடுத்துக்கொள்கின்றனர்” என தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த அவர்,
“அத்திக்கடவு - அவிநாசி திட்டம் துவங்குவதற்கான தேதி குறிக்க ஆலோசனை நடைபெற்று வருகிறது. தண்ணீருக்காக காத்திருந்தார்கள். இப்போது தண்ணீர் வந்துவிட்டதால் வெகுவிரைவில் துவக்க போகிறார்கள் என ஆடி 18-ம் தேதி அன்று ஓடாநிலையில் நான் செய்தியாளர்களை சந்திக்கும் போதே தெளிவாக சொல்லியிருந்தேன். யாராவது சில அதிகாரிகளை உள்ளே வைத்துக்கொண்டு, திட்டம் துவக்கம் ஆக போகிறது என்ற செய்தியை தெரிந்துகொண்டு, நாம் இதில் அரசியல் மைலேஜ் எடுத்துவிடலாம் என செய்த முயற்சி அது.
அண்ணாமலையின் செயல்பாடுகள் அத்தனையும் அவ்வாறே இருக்கும். அண்ணாமலை பேட்டியளிப்பதற்கு 1 வாரம் முன்பாகவே நான் முதலமைச்சரை சந்தித்து பேசினேன். அப்போதே அவர் சுதந்திர தினம் முடிந்ததும் இதை துவக்க போகிறோம் என கூறினார். அதை தெரிந்து வைத்து கொண்டு தான் அண்ணாமலை பாஜக சார்பில் போராட்டம் அறிவிப்பதாக அந்த பேட்டியையே கொடுத்தார். அப்படியெனில் பேட்டி கொடுத்த அடுத்த நாளே போராட்டத்தை நடத்தலாம் தானே? அவர்களுக்கு நன்றாக தெரியும், தண்ணீர் வந்துவிட்டது, இந்த திட்டத்தை துவக்க போகிறார்கள் என்று. தெரிந்துகொண்டே செய்கின்ற அரசியல் இது” என தெரிவித்தார்.