"பைசன் - காளமாடன் வெல்லட்டும்" - படத்தை பாராட்டிய உதயநிதி ஸ்டாலின்!
இயக்குனர் மாரி செல்வராஜ், நடிகர் துருவ் விக்ரமை வைத்து ‘பைசன்’ என்ற படத்தினை இயக்கியுள்ளார். பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து பைசன் படத்தை தயாரித்துள்ள நிலையில் படத்தில் அனுபமா பரமேஸ்வரன், லால், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த நிலையில் பைசன் படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், படக்குழுவை பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "பைசன் திரைப்படம் பார்த்தேன். மீண்டும் ஒரு முக்கியமான படைப்பைத் தந்திருக்கிறார் மாரிசெல்வராஜ் சார்.
வன்முறை நிறைந்த வாழ்க்கைச் சூழலுக்கு மத்தியில், கபடி விளையாட்டில் சாதித்து அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரரின் வாழ்வை சிறப்பாக படமாக்கி இருக்கிறார்.
ஓர் இளைஞன், எல்லாவற்றுக்கும் மேலாக தன்னுடைய கபடி விளையாட்டின் மீது கொண்டுள்ள நம்பிக்கையும், அதுவே அவனை இலக்கை நோக்கி உயர்த்துவதையும் தனக்கே உரிய பாணியில் மாரி சார் கிராப்ட் செய்திருக்கிறார். படம் பேசுகிற அரசியலை உள்வாங்கி மிகச்சிறப்பாக நடித்திருக்கும் தம்பி துருவ் விக்ரம் உட்பட படத்தில் நடித்துள்ள அனைத்து கலைஞர்களுக்கும் என் வாழ்த்துகள். பைசன் - காளமாடன் வெல்லட்டும்"! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.