பிர்சா முண்டாவின் 150 வது பிறந்த நாள் : பிரதமர் மோடி புகழாரம்...!
இந்தியாவின் விடுதலை வீரர்களில் ஒருவர் பிர்சா முண்டா. இவர் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள உலிகாட் என்ற இடத்தில் 1875 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் தேதி பிறந்தார். அப்போது நாட்டை ஆண்ட ஆங்கிலேயர்களின் ஆதரவு பெற்ற ஜாமீன்தார்கள், பழங்குடியின மக்களை அடிமைகளாக நடத்தினர். இதனால் பழங்குடியின மக்களில் ஒருவரான இருந்த பிர்சா முண்டா ஜமீன்தார்களுக்கு ஆதரவாக இருக்கும் ஆங்கிலேய அரசை எதிர்த்தார்.
'உழுபவனுக்கே நிலம் சொந்தம்' என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தை துவக்கினார். நாடு முழுவதும் உள்ள பழங்குடியின மக்களை ஒன்று திரட்டினார். நிலங்களை மீட்டு பழங்குடியினரிடம் ஒப்படைத்தார். ஆங்கிலேயர்களுக்கு வரிகட்ட மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த ஆங்கிலேயே அரசு இவருக்கு எதிராக ஆயுதம் தாங்கிய படையையே அனுப்பியது. தீரத்துடன் அங்கிலேயர் படையை எதிர்த்தார் பிர்சா முண்டா. இடைவிடாத போராட்டத்திற்கு பின் பிர்சா முண்டாவை கைது செய்த ஆங்கிலேயே அரசு அவரை சிறையில் வைத்து செய்த கொடுமை செய்தது. இதன் காரணமாக பிர்சா முண்டா தனது 25 வயதிலேயே இறந்து போனார். பிர்சா முண்டாவின் பிறந்த நாளான நவம்பர் 15 ஆம் தேதியை தேசிய பழங்குடியின நாளாக அனுசரிக்கப்படுகிறது.
இன்று பிர்சா முண்டாவின் 150 அவது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
”பழங்குடியினர் தினத்தின் இந்த புனிதமான சந்தர்ப்பத்தில், தாய்நாட்டின் பெருமையைப் பாதுகாப்பதில் நாட்டின் சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர் பிரபு பிர்சா முண்டாவின் ஈடு இணையற்ற பங்களிப்பை முழு தேசமும் நினைவு கூர்கிறது. அந்நிய ஆட்சியின் அநீதிக்கு எதிரான அவரின் போராட்டமும் தியாகமும் ஒவ்வொரு தலைமுறையையும் தொடர்ந்து ஊக்குவிக்கும். நாட்டின் சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் 150வது பிறந்தநாளில் அவருக்கு நூறு மடங்கு வணக்கங்கள்” என்று தெரிவித்துள்ளார்.