பிரதமர் மோடியுடன் பில் கேட்ஸ் சந்திப்பு!
டெல்லியில் ஆண்டுதோறும் ரைசினா மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாநாட்டில் சர்வதேச அளவில் நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்து ஆலோசிக்கப்படும். இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசு பிரதிநிதிகள், வணிகர்கள், அறிவியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் கலந்துக் கொள்வர். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ரைசினா மாநாடு நடைபெற்று வருகிறது.
இதில், பங்கேற்பதற்காக, மைக்ரோசாப்ட் இணை நிறுவனரும், பிரபல தொழிலதிபருமான பில்கேஸ்ட் இந்தியா வருகை தந்துள்ளார். இந்த வருகையின் போது மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், ஜே.பி.நட்டா, சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோரை அவர் சந்தித்து பேசினார். தொடர்ந்து, பில்கேட்ஸ் டெல்லியில் பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "எப்போதுமே பில்கேட்ஸை சந்தித்து பேசுவது சிறப்பானதாக இருக்கும். தற்போதைய சந்திப்பின் போது, எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் விதமாக, தொழில்நுட்பம், புதுமை மற்றும் நிலைத்தன்மை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது" என்று தெரிவித்திருந்தார்.
அதேபோல், பில்கேட்ஸ் எக்ஸ் தளத்தில் இதுகுறித்து கூறுகையில், "2047ம் ஆண்டுக்குள் இந்தியாவின் வளர்ச்சி குறித்து சிறப்பான விவாதம் நடத்தப்பட்டது. இந்தியாவின் வளர்ச்சியில் சுகாதாரம், விவசாயம், செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற துறைகளில் ஏற்பட்டுள்ள சிறப்பான முன்னேற்றங்களால் ஏற்படும் தாக்கம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. புதுமையினால் இந்தியாவில் மட்டுமல்லாது, உலகளவில் வளர்ச்சியை ஏற்படுத்துகிறது என்பதை பார்க்க சுவாரஸ்யமாக உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.