மசோதா ஒப்புதல் விவகாரம் | குடியரசுத் தலைவர் விளக்கம் கோரிய மனு மீது இன்று தீர்ப்பு
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர், குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க கால தாமதம் ஏற்படுகிறது என்று தொடுக்கப்பட்ட வழக்கில், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க உச்சநீதிமன்றம் காலக்கெடுவை விதித்து உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 14 கேள்விகளை எழுப்பியிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த செப்டம்பர் மாதம் 10 நாட்கள் விசாரணை நடத்தியது.
செப்டம்பர் 11-ந்தேதி நடந்த இறுதி விசாரணையின்போது தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. இதற்கிடையே, அரசியல் சாசன அமர்வுக்கு தலைமை வகிக்கும் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயின் பதவிக்காலம் நவ.23ம் தேதியுடன் முடிவடைகிறது.
ஆனால் சனி, ஞாயிறு விடுமுறை எனபதால், நாளை (நவ.21) அவரது கடைசி பணி நாளாகும். இந்த சூழலில், அவர் ஓய்வு பெறுவதற்கு ஒரு நாள் முன்னர் இந்த தீர்ப்பு வர இருப்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மேலும், இந்த தீர்ப்பு மாநில உரிமைகள் தொடர்பான அம்சங்களையும் பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.