பிகார் SIRக்கு எதிரான வழக்கு : இஸ்லாமியர்கள் நீக்கபட்டதாக எழுந்த புகாரை மறுத்த தேர்தல் ஆணையம்..!
உச்ச நீதிமன்றத்தில் இன்று பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிரான வழக்கு நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணையின் போது தேர்தல் ஆணையம் தரப்பில் வாக்காளர் பட்டியலில் பலர் நீக்கப்பட்டதாக கூறப்பட்ட புகார் மறுக்கப்பட்டது. விண்ணப்பிக்காதவர்கள் பெயர் சேர்க்கப்படவில்லை என்றும் பெயர் இல்லாதவர்கள் இன்னும் விண்ணப்பிக்கலாம் என்று கூறியது. மேலும் இஸ்லாமியர்கள் பலர் நீக்கப்பட்டனர் என்ற புகாரை மறுத்த தேர்தல் ஆணையம் மனுதார்கள் நீதிமன்ற நேரத்தை வீணடிப்பதாக தெரிவித்தது.
இதனை தொடர்ந்து வாதிட்ட ஒரு மனுதாரர் தரப்பு ; தேர்தல் ஆணையம் நடத்தும் சிறப்பு திருத்தம் தேவையற்றது. புதிய விதிமுறைகளை விதித்து திட்டமிட்டு வாக்காளர்களை நீக்கும் திட்டத்தை தேர்தல் ஆணையம் செயல்படுத்துகிறது. முன்பு 69 லட்சம் வாக்காளர்கள் வரைவு பட்டியலில் நீக்கப்பட்டார்கள். தற்போது இறுதி பட்டியலில் 47 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். ஒரே வீட்டில் 880 பேர், 855 பேர், 811 பேர் உள்ளதாக இறுதி வாக்காளர்கள் பட்டியல் தெரிவிக்கிறது. ஒரு மாதத்துக்கு முன் பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்த 1.40 லட்சம் பேர் தங்களது பெயரை நீக்க விண்ணப்பித்ததாக கூறப்பட்டுள்ளது. விண்ணப்பித்த நபர்கள் ஒரே மாதத்தில் ஏன் நீக்க விண்ணப்பிக்க வேண்டும்? இதில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளது என்று வாதிட்டனர்.
இரு வாதங்களை கேட்ட நீதிபதிகள், பீகார் அனுபவத்தின் படி நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளும்போது குளறுபடிகள் நடக்காமல் இருப்பதை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர். மேலும் வழக்கு மீதான விசாரணையை வரும் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.