இட ஒதுக்கீட்டு உயர்வு மசோதா - பீகார் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்.!
இட ஒதுக்கீட்டு உயர்வு மசோதா பீகார் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
பீகாரில் ஆளும் ஜேடியூ- ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணி அரசு சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை நடத்தியது. அண்மை காலங்களில் நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய முதல் மாநிலம் பீகார். ஆனால் இதற்கு எதிராகவும் வழக்குகள் தொடரப்பட்டன. இதில் சாதக, பாதகமான தீர்ப்புகள் வந்தன. சமீபத்தில் பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகள் வெளியாகின.
இதன்படி, பீகார் மாநிலத்தில் மொத்த மக்கள் தொகை 13 கோடி. இதில் பிற்படுத்தப்பட்டோர் 27.13%, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 36.01%, பிற்படுத்தப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 63.14% முற்படுத்தப்பட்டோர் 15.52% தாழ்த்தப்பட்ட மக்கள் 19.65%. பழங்குடி இன மக்கள் 1.69%. இவ்வாறு பீகார் அரசு அறிவித்துள்ளது.
இதில் குறிப்பாக, முற்படுத்தப்பட்டோர் பிரிவில் பிராமணர் – 3.65% , ராஜ்புத் – 3.45%, காயஸ்த் – 0.60% மக்கள் உள்ளனர். பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் யாதவ் – 14.26%, பனியா – 2.31%, குஷ்வாகா 4.21%, குர்மி 2.87%, பனியா 2.31% மக்கள் இருப்பதாக சாதிவாரி கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
பீகார் சட்டப்பேரவையில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் இட ஒதுக்கீட்டு வரம்பை 50 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார். உயர்சாதி வகுப்புகளுக்கு வழங்கப்படும் 10 சதவீத இட ஒதுக்கீடு சேர்த்து 75% ஆக உயர்த்தும் முடிவை முன்வைத்தார்.
இந்நிலையில், பிகாரில் இட ஒதுக்கீட்டு வரம்பை 50 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக உயர்த்தும் மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து பீகார் மாநிலத்தில் பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு 10% சேர்த்து தற்போது இட ஒதுக்கீடு 75% ஆக உள்ளது.
தமிழ்நாட்டில் ஏற்கனவே 69% இடஒதுக்கீடு அமலில் உள்ளது. இவற்றோடு பொருளாதரத்தில் நலிந்த முன்னேறிய 10% இடஒதுக்கீடையும் சேர்த்தால் மொத்தமாக 79% இடஒதுக்கீடு அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.