"ஜனநாயகப் போரின் மையமாக பீகார் மாறியுள்ளது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!
பீகாரில் இந்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அங்கு வாக்களர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் நடைபெற்றது. ஆனால் அந்த திருத்ததினால் வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 65 லட்சம் பேர் நீக்கப்பட்டிருப்பதாக பெரும் சர்ச்சை வெடித்தது. இதனைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வுடன் இணைந்து வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்வதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ராகுல் காந்தி கடந்த 17-ஆம் தேதி முதல் பீகாரில் 15 நாட்களுக்கான வாக்களர் உரிமை நடைபயணத்தைத் தொடங்கினார். இந்த பேரணிக்கு ஆதரவு தரும் வகையில் இன்று பீகார் மாநிலம் தர்பங்கா நகரில் நடைபெற்ற பேரணியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து தனது எக்ஸ் பதிவில் அவர்,
”இந்தியாவின் ஜனநாயகப் போரின் மையமாக பீகார் மீண்டும் மாறியுள்ளது. எனது சகோதரர்கள் ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் மற்றும் சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோருடன் இணைந்து, வாக்காளர்களை நீக்குவதன் மூலமோ அல்லது நிறுவனங்களைக் கடத்துவதன் மூலமோ பாஜக மக்களின் அதிகாரத்தை நசுக்க முடியாது என்று நான் அறிவித்தேன்.
இந்தியா கூட்டணி பிறந்த இடம் பீகார், BJPயின் ஆணவம் புதைக்கப்படும் இடம் பீகார். இது இந்திய ஜனநாயகத்தின் அடுத்த அத்தியாயத்தை ஒளிரச் செய்யும் தீப்பொறி”
என பதிவிட்டுள்ளார்.