பீகார் தேர்தல் : எதிர்க்கட்சிகள் வலுவாக இருக்கும் வாக்குச்சாவடிகளில் மின்சாரம் துண்டிப்பு - ஆர்ஜேடி கட்சி பரபரப்பு குற்றச்சாட்டு..!
பீகார் சட்டசபை தேர்தல் இன்று முதல் கட்டமாக 121 சட்டசபை தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. இந்த 121 தொகுதிகளில் மொத்தம் 3 கோடியே 75 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 10 லட்சத்து 72 ஆயிரம் பேர் புதிய வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 7 லட்சத்து 38 ஆயிரம் பேர் 18 மற்றும் 19 வயதானவர்கள் ஆவர். 122 பெண் வேட்பாளர்களும், ஒரு திருநங்கை வேட்பாளரும் அடங்குவர்.
இந்த நிலையில் முதற்கட்டமாக இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் வாக்களித்து வரும் நிலையில் 11 மணி நிலவரப்படி, பீகாரில் 27.65 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பீகாரில் வாக்குப்பதிவு மந்தமாக நடப்பது போல தேர்தல் ஆணையம் வேண்டும் என்று வாக்குப்பதிவு எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவதாகவும், எதிர்க்கட்சி கூட்டணிகள் வலுவுடன் இருக்கும் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் அவ்வப்போது மின்சாரம் துண்டிக்கப்படுவதாகவும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.
மேலும் தேர்தல் ஆணையமானது தனது செயல்பாடுகளில் பாரபட்சமற்ற தன்மையை பராமரிக்க வேண்டும் என்றும் இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.