பீகார் தேர்தல் : வாக்குப்பதிவு தரவுகளை வெளியிடவில்லை - தேர்தல் ஆணையத்தின் மீது தேஜஸ்வி குற்றச்சாட்டு...!
பீகாரில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த 6 ஆம் தேதி முதற்கட்ட வாக்குபதிவு நடைபெற்ற நிலையில் நாளை இரண்டாம் கட்ட வாக்குபதிவு நடைபெற உள்ளது. இரு கட்டங்களாக பதிவான வாக்குகள் நவம்பர் 14ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் இண்டியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
"ஆர்ஜேடி தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி "வாக்கு திருட்டை அனுமதிக்காது. முதல் கட்ட சட்டமன்றத் தேர்தல் முடிந்து நான்கு நாட்கள் கடந்த பிறகும், வாக்காளர்களின் பாலின வாரியான தரவை தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. இது முதல் முறையாக நடக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஆகியோரால் தேர்தல் ஆணையம் சரியாக செயல்படுவதை நிறுத்திவிட்டது. தேர்தல் ஆணையமானது உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் கூட்டு சேர்ந்து பிரச்சனையை உருவாக்க முயன்றால், அதிகாரிகள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட வெளியாட்கள் பீகாரை கட்டுப்படுத்த விரும்புகிறார்கள், இதை பீகார் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். அவர் பிரதமர் நரேந்திர மோடி தனது தேர்தல் பிரச்சாரங்களின் போது பீகாரில் வேலையின்மை மற்றும் இடம்பெயர்வு போன்ற பிரச்சினைகள் பற்றிப் பேசவில்லை, எதிர்மறை அரசியலில் ஈடுபட்டார். பீகார் தேர்தலில் இந்திய கூட்டணி வெற்றி பெற்றால் குற்றவாளிகள், வகுப்புவாத சக்திகள் மற்றும் ஊழலுக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுப்போம்" என்று தெரிவித்தார்.