Big Bash இறுதிப்போட்டி | சாம்பியன் பட்டம் வென்றது ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி!
ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 தொடரான பிக் பாஷ் லீக் கிரிக்கெட் தொடரின் 14-வது சீசன் நடைபெற்று வந்தது. இந்த தொடரில் இன்று (ஜன.27) நடைபெற்ற இறுதிப்போட்டியில் வார்னர் தலைமையிலான சிட்னி தண்டரும் நாதன் எல்லீஸ் தலைமையிலான ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணியும் மோதிக்கொண்டன.
இதில் டாஸ் வென்ற ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய சிட்னி தண்டர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது. சிட்னி தண்டர் அணி தரப்பில் அதிகபட்சமாக ஜேசன் சங்கா 67 ரன்கள் எடுத்தார்.
ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி தரப்பில் கேப்டன் எல்லீஸ், ரிலே மெரிடித் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி களமிறங்கியது. ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி வீரர்கள் ரன்களை வாரி குவித்தனர்.
தொடக்க வீரர், ஓவன் 39 பந்தில் சதம் அடித்து அசத்தினார். இறுதியில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி 14.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 185 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.