இளையராஜாவின் மகள் பவதாரிணி மறைவு - இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இரங்கல்..!
இளையராஜா மகள் பவதாரிணியின் மறைவையொட்டி இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் தனது இரங்கலை தெரிவித்தார்.
தமிழ் திரையுலகில் பின்னணி பாடகியாக வலம் வந்தவர் பவதாரிணி. இவர் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் ஆவார். இவர் சில படங்களுக்கு இசையமைப்பாளராகவும் இருந்துள்ளார். தமிழ் சினிமாவில் இருந்த மிக சொற்பமான பெண் இசையமைப்பாளர்களில் பவதாரிணியும் ஒருவர். இவர் ‘பாரதி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மயில் போல பொண்ணு ஒன்னு’ என்ற பாடலை பாடியதற்காக தேசிய விருதை பெற்றார்.
இதையும் படியுங்கள் ; “சித்த மருத்துவத்தின் சிறப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
பவதாரிணி அழகி, புதிய கீதை, கோவா, அனேகன் உள்ளிட்ட பல படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். இந்நிலையில், சில நாட்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக இலங்கைக்கு சென்றிருந்தார். இந்த நிலையில், அவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்ததாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார்.
பவதாரிணியின் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். அதேபோல் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்தர், இயக்குநர் செல்வராகவன், நடிகர் விஷால் உள்ளிட்ட பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளான பவதாரிணி மறைவுக்கு இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
"மயிலிறகாய்த் தமிழர் மனதையெல்லாம் வருடிய பவதாரிணியின் மதுரமான குரல் இன்றும் ஆகாயத்தில் மலர்கிறது. காற்றெல்லாம் தீரா அதிர்வெழுப்பிக் ககனவெளியெங்கும் கதிரொளியாய் விரிகிறது. இசைஞானி இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா உங்களுடன் இந்த துயரமான நேரத்தில் எங்கள் இதயம் இருக்கிறது. இவ்வாறு தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
#ripbhavatharini மயிலிறகாய்த் தமிழர் மனதையெல்லாம் வருடிய பவதாரிணியின் மதுரமான குரல்
இன்றும் ஆகாயத்தில் மலர்கிறது.
காற்றெல்லாம் தீரா அதிர்வெழுப்பிக்
ககனவெளியெங்கும் கதிரொளியாய் விரிகிறது.
இசைஞானி இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா
Our hearts are with you in this time of…— A.R.Rahman (@arrahman) January 26, 2024