தேனி கொண்டு செல்லப்பட்ட பவதாரிணியின் உடல் - இன்று நல்லடக்கம்..!
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணிப் பாடகியுமான பவதாரணியின் உடல் இறுதிச்சடங்கிற்காக அவரது சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமானவர் பவதாரிணி. இவர் பாரதி படத்தில் ‘மயில்போல’, ராமன் அப்துல்லா படத்தில் ‘என்வீட்டு சன்னல்’ உள்ளிட்ட பாடல்களை பாடியுள்ளார். 47 வயதாகும் பவதாரிணி உடல்நலக்குறைவு காரணமாக ஆயுர்வேத சிகிச்சை மேற்கொள்ள இலங்கை சென்றிருந்தார். ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த பவதாரிணி, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
பவதாரிணியின் இறப்பிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திரைப்பிரபலங்கள், பாடகர்கள், இசையமைப்பாளர் என அனைவரும் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மறைந்த பாடகி பவதாரிணியின் உடல் விமானம் மூலம் இலங்கையிலிருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டு தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதனையடுத்து பவதாரிணியின் உடல் இறுதிச் சடங்கிற்காக அவரது சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்பட்டது.தேனி லோயர்கேம்பில் உள்ள இளையராஜாவின் பண்ணைவீட்டு வளாகத்தில் உள்ள இளையராஜாவின் தாயார் மற்றும் மனைவியின் சமாதிகளுக்கு நடுவே பவதாரிணி உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. உடல் அடக்கம் செய்யும் இடமான லோயர் கேம்ப் பகுதியில் உள்ள இளையராஜாவின் பண்ணை வீட்டில், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குடும்ப வழக்கப்படி சடங்குகள் செய்யப்பட்டு, நண்பகல் 12 மணிக்கு மேல் பவதாரிணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.