அண்ணாவுக்கு பாரத ரத்னா ?
பேரறிஞர் அண்ணா என்னும் சிஎன் அண்ணாதுரை தமிழ்நாட்டின் அரை நூற்றாண்டு அரசியல் சமூக வரலாற்றில் நீக்கமற நின்ற, நிற்க போகும் ஒரு பெயர். சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத ஒரு மாநில கட்சி ஆட்சியை பிடித்த வரலாற்றை உருவாக்கியவர் அண்ணா என்பது அதிகம் பேசப்பட்ட வரலாறு.
ஆனால் முதலமைச்சர் ஆவதற்கு முன்பே தேசிய அரசியலில் நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்று செயல்பட்டவர். அண்ணா என்பதும் அவரது நாடாளுமன்ற உரைகள் இன்றும் பலருக்கும் பாடமாக இருக்கிறது என்பதும் அதிகம் பகிரப்படாத ஒரு செய்தி.
அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு என்று உரிமை முழங்கிய அண்ணா, சீனாவால் தேசத்துக்கு அச்சுறுத்தல் என்று வந்த போது தன் கொள்கைக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்தார்.
அப்போது கூட திராவிட நாடு முழக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டாலும் அந்த கோரிக்கைக்கான தேவை அப்படியே இருப்பதாகவே அறிவித்து தனது அரசியல் மேதமையை வெளிப்படுத்தியவர் அண்ணா.
வெறும் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்த அண்ணாவின் பெயரை சொல்லித் தான் திராவிட கட்சிகள் அரை நூற்றாண்டாக தமிழ்நாட்டை ஆள்கின்றன. அதிலும் தேசிய கட்சிகளுக்கு இடம் தராத ஒரே மாநிலம் என்று தனித்துவமும் அண்ணாவால் தமிழ்நாட்டிற்கு நிற்கிறது.
இவ்வளவு ஏன் ? சமீபத்தில் கட்சி ஆரம்பித்த நடிகர் விஜய்யின் கட்சி பெயரில் திராவிடம் என்று சொல் இல்லாததும் தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழக என்று இருப்பது குறித்த விவாதத்திலும் அண்ணாவின் அன்றைய பேச்சுக்களே இன்றும் விவாதத்தின் மையப் பொருள்.
2021ல் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் ஒன்றிய அரசு என்ற வார்த்தையை பயன்படுத்துவதும் அண்ணாவின் மேற்கோள்களில் இருந்ததே, படித்தவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று இந்த நவீன யுகத்தில் குரல் எழுப்பும் காலகட்டத்தில் 1967ல் அண்ணா அமைத்த முதல் அமைச்சரவையில் 90% பேர் இரட்டை டிகிரி பெற்றிருந்தவர்கள் என்பதை எப்படி சொல்லாமல் இருக்க முடியும்?
அதெல்லாம் சரி, பிப்ரவரி 3 நினைவு நாளும் முடிந்துவிட்டது. செப்டம்பர் 15 பிறந்த நாளுக்கும் இன்னும் நாட்கள் உள்ளதே? இப்போது ஏன் அண்ணாவை பற்றிய கட்டுரை என்று இதை படிக்கும் உங்களுக்கு கேள்விகள் எழலாம்.
கடந்த ஒரு மாதமாக அறிவிக்கப்பட்டு வரும் பாரத ரத்னா விருதுகளில் வரும் நாட்களில் ஒருவேளை அறிஞர் அண்ணாவின் பெயரும் இடம்பெறுமோ? என்ற யூகத்திலும், இடம்பெற்றால் என்ன தவறு? என்று அண்ணாவின் அரசியல் வாரிசுகள் எழுப்பப் போகும் கோரிக்கைகளுக்கும் முன்னோட்டமே இந்த கட்டுரை....