சரண்சிங், நரசிம்மராவ், எம்எஸ் சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா - பிரதமர் மோடி அறிவிப்பு...!
முன்னாள் பிரதமர்கள் சவுத்ரி சரண் சிங், பி.வி.நரசிம்மராவ் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
ஒவ்வொரு துறையிலும் சாதனை புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. நாட்டிலேயே மிக உயர்ந்ததாக மதிக்கப்படும் பாரத ரத்னா விருது, பீஹார் முன்னாள் முதல்வர் கர்ப்பூரி தாக்கூர் மற்றும் பாஜ மூத்த தலைவர் அத்வானிக்கு அண்மையில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், முன்னாள் பிரதமர்கள் சரண்சிங், நரசிம்ம ராவ், தமிழ்நாட்டைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி தனது 'எக்ஸ்' வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சரண் சிங்
நாட்டின் 7-வது பிரதமராக சரண் சிங் 1979ல் பிரதமராக பதவியேற்றார். 170 நாட்கள் பிரதமர் பதவியிலிருந்த சரண் சிங், பிறகு, காங்கிரஸ் ஆதரவை வாபஸ் பெற்றதால் ராஜிநாமா செய்ய நேரிட்டது. 1987ல் மறைந்தார்.
நரசிம்ம ராவ்
1991-96 காலகட்டத்தில் பிரதமராக இருந்த நரசிம்ம ராவுக்கும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரசை சேர்ந்த இவர் வெளியுறவு, பாதுகாப்பு, ரயில்வே போன்ற முக்கிய இலாகாக்களையும் கைவசம் வைத்திருந்தார். இவர் 2004ல் மறைந்தார்.
எம்எஸ் சுவாமிநாதன்
கடந்த ஆண்டு மறைந்த இந்தியாவின் சிறந்த வேளாண் விஞ்ஞானியும், பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படுபவருமான எம்.எஸ்.சுவாமிநாதனுக்கும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.