முதன்முறையாக எம்எல்ஏ ஆனவருக்கு அடித்த ஜாக்பாட்....யார் இந்த பஜன்லால் சர்மா?
ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பஜன்லால் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரது பெயர் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் அறிவிக்கப்பட்டது. யார் இந்த பஜன்லால் சர்மா என்பதை தற்போது பார்க்கலாம்...
பஜன்லால் சர்மா, சங்கனர் தொகுதி எம்எல்ஏவாக முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மற்றும் பாஜக மாநில பொதுச் செயலாளராக உள்ளார். ஜெய்ப்பூரில் நடைபெற்ற எம்எல்ஏக்கள் கட்சி கூட்டத்தில், பஜன்லால் சர்மா முதலமைச்சராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜெய்ப்பூரில் உள்ள ஜவஹர் சர்க்கிளில் பஜன்லால் சர்மாவின் வீடு அமைந்துள்ளது. இவர் பரத்பூரைச் சேர்ந்தவர். இவர் ஆர்எஸ்எஸ் அமைப்பு மற்றும் பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்படுகிறார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பில் நீண்ட நாட்களாக இவர் பணியாற்றி வருகிறார். மேலும் மாநில பொதுச்செயலாளராக பணியாற்றி வருகிறார். ஜெய்ப்பூரின் சங்கனர் போன்ற பாஜக பலம் பொருந்திய தொகுதியில், முதன்முறையாக களமிறங்கி வெற்றி பெற்றவர்.
சங்கனர் தொகுதி பாஜகவின் கோட்டை என்று கூறப்படுகிறது. பஜன் லால் சர்மா 48081 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸின் புஷ்பேந்திர பரத்வாஜை தோற்கடித்தார். ராஜஸ்தானின் புதிய முதல்வர் யார் என்பது குறித்து பல விவாதங்கள் நடந்து வந்தன. மத்தியப் பிரதேசத்தில் மோகன் யாதவ் போன்று பாஜகவும் முதலமைச்சராகவும், புதிய பெயரை அறிவிக்கலாம் என்று கூறப்பட்டது.
அதே போல் தீவிர ஆலோசனைக்கு பின்னர் ராஜஸ்தான் முதலமைச்சராக பஜன்லால் சர்மா தேர்வு செய்யப்பட்டார். ராஜஸ்தானில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், சபாநாயகர் பெயர்கள் அறிவிக்கப்பட்டதையடுத்து, ராஜஸ்தானில் தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்து நீடித்து வந்த அரசியல் சஸ்பென்ஸ் முற்றிலுமாக முடிவுக்கு வந்தது. பஜன்லால் ஷர்மாவின் பெயர் எங்கும் விவாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பல மூத்த தலைவர்களின் பெயர்கள் பரிந்துரையில் இருந்தும், பஜன்லால் சர்மாவின் பெயரை அறிவித்ததும், அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.